
இறைச்சிக்காக உலகெங்கிலும் விலங்குகளைக் கொல்வது அதிகரித்து விட்டதால், செயற்கையாக இறைச்சி கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதிலும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த அப்சைட் புட்ஸ் மற்றும் குட் மீட் போன்ற நிறுவனங்கள் மனிதர்கள் பயன்படுத்தும் படியான இறைச்சி தயாரிப்பு ஒழுங்கு முறைக்கு ஒப்புதலையும் பெற்றுள்ளனர். ஆனால் இதில் பல பிரச்சினைகள் இருப்பதால் இன்றளவிலும் மிகப்பெரிய அளவில் தயாரிப்புகளை அவர்கள் தொடங்கவில்லை.
ஆனால் BENE என்று நிறுவனம், சற்று வித்தியாசமாக யோசித்து செல்லப் பிராணிகளுக்கான செயற்கை இறைச்சி தயாரிப்பதில் கவனம் செலுத்தியது. இதில் அந்த நிறுவனம் வெற்றியும் கண்டுள்ளதால், ஐரோப்பாவிலேயே செயற்கை இறைச்சி செய்து விற்பனைக்காக அனுமதி பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமை இதற்குக் கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன இயக்குனர் கூறுகையில், "நாய் மற்றும் பூனைகளுக்கான செயற்கை இறைச்சி தயாரித்து விற்பதற்கு உலகளவில் அங்கீகாரம் பெற்ற முதல் நிறுவனம் நாங்கள்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் வளர்ப்பு பிராணிகளுக்கான செயற்கை இறைச்சியை தயாரிக்கும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் உணவுக்காக தங்களின் செல்லப் பிராணியை கொல்வதற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த முயற்சியால் உலகில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
மேலும் செல்லப்பிராணிகள் கொல்லப்படுவதால் அது மறைமுகமாக உலக வெப்பமயமாதலுக்கும் வழிவகுக்கிறது எனக் கூறுகின்றனர். இதனாலேயே உலகெங்கிலும் விலங்குகளைக் கொல்லாமல் செயற்கை இறைச்சி தயாரித்து அதை பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்னதான் தொழில்நுட்ப ரீதியாக செயற்கை இறைச்சி சாத்தியமானது என்றாலும், வணிகரீதியில் அது எந்த அளவுக்கு வெற்றிபெறும் என தெரியவில்லை. எனவே வணிக ரீதியாக அவற்றை வெற்றி பெறச் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.
இத்தகைய செயற்கை இறைச்சிகள் விலங்குகளின் உடலில் உள்ள செல்லை பிரித்தெடுத்து, அவற்றை ஆய்வகங்களில் வைத்து வளர்த்து உருவாக்கப்படுகிறது. இதனால் விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேசமயம் இது எந்த அளவுக்கு மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு சரியானதாக இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.