கடந்த ஏப்ரல் 1ம் தேதி எத்தர் நிறுவனம் கொண்டாடிய கம்யூனிட்டி டே நிகழ்ச்சியில், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இத்துடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘Ather Halo’ என்ற ஸ்மார்ட் ஹெல்மெட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த ஹெல்மெட் குறித்த முழு தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
எத்தர் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்நிறுவனத்திற்கு உள்ள நன்மதிப்பால் ஒவ்வொரு மாதமும் அவர்களின் விற்பனை விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் எல்லா விதமான மக்களும் விரும்பும் வகையில், Ather Rista என்ற ஃபேமிலி ஸ்கூட்டரை எத்தர் நிறுவனம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்துடன் புதிய ஸ்மார்ட் ஹெல்மெட் ஒன்றையும் அறிமுகப்படுத்தினர்.
அதன் பெயர் Ather Halo. நீங்கள் நினைப்பது போல இது சாதாரண ஹெல்மெட் அல்ல. முற்றிலும் வித்தியாசமான ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட் ஹெல்மெட். இதைப் பயன்படுத்தி நீங்கள் போன் பேசலாம், பாட்டு கேட்கலாம் அல்லது உங்கள் பின் இருக்கையில் இருக்கும் நபர் இதே போல ஹெல்மெட் பயன்படுத்தினால் இருவரும் தொடர்பு கொள்ளலாம். இதற்காகவே பிரத்தியேகமாக இந்த ஹெல்மெட்டில் மைக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டை சரியாக பொருத்தியுள்ளீர்களா என்பதை டிடெக்ட் செய்யும் Auto Wear Detection டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் பயன்படுத்தி நீங்கள் பாடல்கள் கேட்கிறீர்கள் அல்லது கால் பேசப் போகிறீர்கள் என்றால், எத்தர் ஸ்கூட்டரில் உள்ள முன்பக்க திரையில் அதை கண்ட்ரோல் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டை, வயர்லெஸ் சார்ஜிங் முறையில் சார்ஜ் போடலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஹெல்மட்டை கழட்டி ஸ்கூட்டர் உள்ளே வைத்தால் தானாக சார்ஜ் ஏறிக்கொள்ளும். இந்த ஹெல்மெட்டும் ஸ்கூட்டரும் எப்போதும் இணைப்பிலேயே இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் ஹெல்மெட்டின் விலை என்னவென்று பார்க்கும்போது, Ather Halo முதல் தர முழு ஹெல்மெட்டின் விலை, ரூபாய் 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே இதன் அடுத்த மாடலான Half Space ஹெல்மெட்டின் விலை 4,999 ரூபாய் ஆகும். இந்த ஹெல்மெட்டை நீங்கள் எத்தர் ரிஸ்டா வாகனங்களுடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இருப்பினும் சந்தையில் இப்படி ஒரு ஸ்மார்ட் ஹெல்மெட் வந்திருப்பது மக்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இனிவரும் காலங்களில் எல்லா எலக்ட்ரிக் வாகனங்களிலும் இத்தனை அம்சங்கள் பொருந்திய ஹெல்மெட் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கலாம்.