
ஒரு பழைய திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருவர் வெளியூரில் இருக்கும் தன்னுடைய மனைவிக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் மனைவியின் கைக்குச் செல்கிறது. அவர் ஆவலுடன் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார்.
மறுகணம், அவருடைய கையில் இருக்கும் தாளின் நடுவில் அந்தக் கணவருடைய முகம் தோன்றுகிறது. தான் எழுதிய கடிதத்தை அவரே படித்துக் காண்பிக்கிறார்.
உண்மையில் அந்தக் கணவர் அந்த இடத்தில் இல்லை. அவர் எழுதிய கடிதம்மட்டும்தான் இருக்கிறது. அதை அந்த மனைவிதான் படிக்கவேண்டும். ஆனால், திரைப்பட இயக்குநர் தன்னுடைய கலைச் சுதந்தரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கணவரே தோன்றி அந்தக் கடிதத்தைப் படிப்பதுபோல் அதைக் காட்சிப் படுத்துகிறார், அதன் மூலம் ஒரு சுவையான காட்சியை உருவாக்குகிறார்.