ஜப்பானில் ஆய்வகத்தில் உருவாகும் குழந்தைகள்.

ஜப்பானில் ஆய்வகத்தில் உருவாகும் குழந்தைகள்.
Published on

மீப காலமாகவே குழந்தைப் பிறப்பில் பலர் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் முழுக்க முழுக்க ஆய்வகத்திலேயே குழந்தைகளை உருவாக்கும் சோதனையில் தீவிரம் காட்டுகிறது ஜப்பான். 

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஜப்பானைப் பார்த்தால் நமக்கு வியப்பாகவே இருக்கும். குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாக அங்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முனைப்பிலேயே ஜப்பான் விஞ்ஞானிகள் இருந்து வருகின்றனர். 

சில சயின்ஸ் ஃபிக்சன் ஆங்கிலத் திரைப்படங்களில், குழந்தைகளை ஆய்வகங்களில் உருவாக்குவதை நாம் பார்த்திருப்போம். அப்போது இதெல்லாம் சாத்தியமில்லை என நினைத்திருப்போம். ஆனால் இது விரைவில் நிஜமாகும் போல் தெரிகிறது. சமீப காலமாகவே மக்கள் மத்தியில் மலட்டுத்தன்மை பல சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. தவறான உணவுப் பழக்கம், துரித உணவுகள் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது என பல காரணங்களால் குழந்தையின்மைப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இது சார்ந்து உலகமெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முற்றிலும் புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். 

குழந்தையை முழுமையாக ஆய்வகத்திலேயே உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். ஆய்வாளர்கள், ஆண் எலிகளின் தோல் செல்களை 'ப்ளூரிபொடென்ட்' என்ற ஸ்டெம் செல்களாக மாற்றலாம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதை வைத்து பலவிதமான திசுக்கள் மற்றும் செல்களை உருவாக்கலாம். இதில் குறிப்பிட்ட சில கெமிக்கல்களைப் பயன்படுத்தி, பெண் கருமுட்டையை உருவாக்கி, அதை செயற்கையாகவே கருவுறவும் செய்ய முடியுமாம். 

குரோமோசோம் பிரச்சனையால் ஏற்படும் குழந்தையின்மையை சரி செய்யும் வாய்ப்பை இந்த ஆய்வு வழங்குகிறது. ஆண் பெண் யாராக இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இந்த கண்டுபிடிப்பு வழங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். முதற்கட்டமாக எலிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், 630 கருக்களை அவர்கள் உருவாக்கிய நிலையில் அதில் ஏழு மட்டுமே முழுமை பெற்று வளர்ந்து பிறந்தது. விகிதாச்சார அடிப்படையில் இது குறைவுதான் என்றாலும், முதற்கட்டத்தில் இருக்கும் ஆய்வு என்பதால், இதுவும் வெற்றி தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இந்த ஆய்வு மனிதர்களிடமும் செய்ய வாய்ப்புள்ளது என கூறிவரும் நிலையில், அடுத்த 5, 6 ஆண்டுகளில் மனிதர்களின் கருமுட்டையை செயற்கையாக உருவாக்கி விடலாம் எனப்படுகிறது. ஆனால், இது பாதுகாப்பானது தானா என்பதை உறுதிப்படுத்த, குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகள் வரை சோதனை தேவைப்படும். அதாவது குறைந்தது இன்னும் 15 ஆண்டுகளில், ஆண் மற்றும் பெண்களின் துணையின்றி, லேப்களிலேயே தொழிற்சாலையில் ஒரு பொருளை உருவாக்குவது போல குழந்தைகளை உற்பத்தி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இந்த ஆய்வைப் பற்றி கேள்விப்படுவதற்கு பயமாக இருந்தாலும், இது எந்த அளவுக்கு சாத்தியம், இப்படி பிறக்கும் குழந்தைகளின் ஆயுள் எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் அறிந்துகொள்ள, இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com