மோசடி கடன் செயலிகளின் ஆபாச மிரட்டல் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து இருக்கிறது. இதை தடுக்க மோசடி கடன் செயலிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் கடன் செயலிகள் மக்களுக்கு எளிதில் கடன் அளிக்கிறேன் என்ற பெயரில் பொதுமக்களை வாடிக்கையாளராக மாற்றுகின்றன. கடன் தொகையை திரும்ப பெற சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபடுகின்றன. இவ்வாறு கடன் பெற்றவர்களுடைய புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாகவும், ஆபாச வீடியோக்களாகவும் மாற்றி மிரட்டுவது. இதை சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிற தொடர்பு எண்களுக்கு அனுப்பி மிரட்டுவது. போன் செய்து ஆபாசமாக மிரட்டுவது போன்ற சட்டவிரோத, கீழ் தரமான செயல்களை செய்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் தற்கொலைகளும் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆன்லைன் கடன் செயலிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 94 ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்தது. மேலும் ரிசர்வ் வங்கி ஆன்லைன் கடன் செயலிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இவற்றில் பெரும்பகுதியானவை சீன முதலீடுகளைக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உரிமம் பெறாமல் செயல்படும் கடன் செயலிகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் நிலையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் இது போன்ற செயலிகளின் பெரும்பான்மையானவை தடை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஆன்லைன் கடன் செயலிகள் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வது அதிகரித்து இருக்கிறது. இதை கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்திருக்கிறது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை. மேலும் ஆன்லைன் கடன் செயலிகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.