
சில ஆண்டுகளுக்கு முன்னால், மின்வணிகம் (eCommerce) என்றதும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் பெயர்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால் இன்றைக்கு, நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கான மின்வணிகக் கடைகள் இருக்கின்றன. சொல்லப்போனால், காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்களில் தொடங்கிக் கணினி, கார், நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள்வரை எல்லாம் மின்வணிகத்தில் விற்கப்படுகின்றன, வாங்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான இணையக் கடைகள் வந்துவிட்டன.
இன்றைக்கு நீங்கள் ஒரு பொருளைத் தயாரித்து விற்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு கடையைத் தொடங்கி, அதற்கு வாடகை கொடுத்து, மின்சாரக் கட்டணம் செலுத்தி, அங்கு வேலை செய்வோருக்குச் சம்பளம் கொடுத்து, வாடிக்கையாளர்களை வரவேற்று, உங்கள் பொருட்களைப்பற்றி விளக்கிச் சொல்லி, விலை பேசி அவற்றை விற்கவேண்டிய தேவை இல்லை. இதனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட புவியியல் பரப்புக்குள் சிக்கியிருக்கவேண்டியதும் இல்லை.
சில கிளிக்குகளில் ஓர் இணையத் தள முகவரியை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம், மேலும் சில கிளிக்குகளில் அதில் ஒரு மின்கடையை நிறுவலாம். அடுத்த சில கிளிக்குகளில் உங்கள் பொருட்களை வலையில் ஏற்றி, பணம் வாங்கும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டு, உங்கள் கடையை உலகுக்கு அறிமுகப்படுத்திவிடலாம், வணிகத்தைத் தொடங்கிவிடலாம்.