இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் காசு இருக்கோ... இல்லையோ... ஒரு மொபைல் போன் கண்டிப்பாக இருக்கும். அதில் செமிகண்டக்டர் (semiconductor) என்ற பொருளைப் பயன்படுத்துகின்றனர்; அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை இல்லை என்றால் என்ன ஆகும்?
செமிகண்டக்டர் (semiconductor) என்பது சிலிக்கானால் (silicon) ஆன ஒரு சிறப்பு வாய்ந்த பொருளாகும் (material). இது மின்சாதனங்களில் உள்ள பாகங்களுக்குச் சில நேரங்களில் மின்சாரத்தை டிரான்சிஸ்டர் (transistors) மூலம் எடுத்துச் செல்லவும் (electricity on), சில சமயங்களில் அதை தடுக்கவும் (electricity off) உதவும். இப்படிப்பட்ட இந்த ‘On and off’ திறன்தான் ஒரு சாதனத்தில் தேவைப்படுகின்ற மின் தேவையைக் கட்டுப்படுத்தி, அதைத் தக்கவைக்கவும் ஏற்றதாக அமைகிறது. அதனால்தான் செமிகண்டக்டர் இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
எங்கெங்கு இதன் தேவை உள்ளது?
அவை மொபைல் போன்கள், டிவிகள், கார்கள், சலவை இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து விளக்குகளில்கூட இருக்கின்றன.
அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை சுலபமாக புரிந்துகொள்ள...
நீங்கள் ஒரு சுவிட்சை அழுத்தும்போது ஒரு விளக்கு எவ்வாறு எரிகிறது என்பதை கற்பனை செய்துபாருங்கள். இப்போது அந்தச் சுவிட்சை நீங்கள் அழுத்தாமல், அந்தச் சுவிட்சின் உள்ளேயே ‘செமிகண்டக்டரால் ஆன டிரான்சிஸ்டர்’ இருந்தால் அது கொஞ்சம் ஸ்மார்ட்டாக செயல்படும். அதாவது, எப்போது மின்சாரத்தை கொடுத்து விளக்கை எரிய வைக்க வேண்டும். எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அதுவே செய்துகொள்ளும்.
அதேபோல்தான் அழைப்புகளைச் செய்ய, புகைப்படங்களை எடுக்க அல்லது இசையை இயக்க உதவுவதற்காக உங்கள் தொலைபேசியின் உள்ளே இதுபோன்ற ‘செமிகண்டக்டரால் ஆன பல ஆயிரம் டிரான்சிஸ்டர்கள்’ ஒன்றாக செயல்படுவதைக் கற்பனை செய்துபாருங்கள். எடுத்துக்காட்டாக உங்கள் போனில் நீங்கள் கேமரா ஆப்சனைக் கிளிக் செய்தால் ‘டிரான்சிஸ்டர்களான சிப் (chip)’ உங்கள் செயலைக் கவனித்து தேவையான மின் தேவையைக் கேமராவிற்கு கொடுத்து உங்கள் போன் ஸ்கிரீனில் படத்தைக் காட்ட வைக்கும்.
எந்தெந்த நாடுகள் இதைத் தயாரிக்கின்றன?
அமெரிக்கா, தைவான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் செமிகண்டக்டரை உருவாக்குவதிலும் வடிவமைப்பதிலும் முன்னணியில் உள்ளன. இந்தியாவும் இதில் வேகமாக முன்னேறி வருகிறது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆறு செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் நான்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ செமிகண்டக்டரால் ஆன சிப்கள் தயாராக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.