உஷாரா இருங்க மக்களே!!! கிரிப்டோ ஸ்கேமர்கள் வந்தாச்சு!


உஷாரா இருங்க மக்களே!!! கிரிப்டோ ஸ்கேமர்கள் வந்தாச்சு!

கிரிப்டோகரன்சி திருடர்கள் OpenAI நிறுவனத்தின் ChatGPT போலவே வலைதளத்தை உருவாக்கி, பயனர்களின் டிஜிட்டல் வாலட்டுகளை அதில் இணைக்க வைத்து, வாலட்டில் உள்ள கிரிப்டோ கரன்சிகளை சுருட்டிக் கொண்டு ஓடி விடுகிறார்கள். 

தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு திருடர்களும் அவர்களுடைய தந்திரங்களை மேம்படுத்திக் கொண்டே செல்கிறார்கள். இவ்வாறு சமீபத்தில் கிரிப்டோ கரன்சி ஸ்கேம் ஒன்று ChatGPT பயன்படுத்தி நடந்துள்ளது. ஸ்கேமர்கள் தற்போது பேசுபொருளாக இருக்கும் GPT-4 மூலமாக வாலட்டில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் டிஜிட்டல் காசுகளை திருடி விடுகிறார்கள். 

ChatGPT-ன் அடுத்த பதிப்பான GPT-4 மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது தொடங்கப்பட்ட மறுநாளில் இருந்தே மோசடி செய்பவர்கள் தங்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி விட்டார்கள். ஃபிஷிங் மின்னஞ்சல்கள் மற்றும் ட்விட்டர் மோசடி இணைப்புகளைப் பயன்படுத்தி OpenAI நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சியைத் தருவதாகக் கூறி ஏற்கனவே பயனர்கள் வைத்திருக்கும் டிஜிட்டல் வாலட்டை, இவர்கள் கொடுக்கும் லிங்கை பயன்படுத்தி அதில் இணைக்க செய்து வாலட்டில் இருக்கும் மொத்த டிஜிட்டல் கரன்சியையும் திருடிக் கொள்கிறார்கள். 

OpenAI நிறுவனம் GPT-4 பயன்படுத்துவதற்கான சேவையை மட்டுமே வழங்குகிறது. அதுவும் ChatGPT பிளஸ் பயனர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதை எல்லா நபர்களும் பயன்படுத்த முடியாது என்பதை தெரிந்து கொண்டே ஸ்கேமர்கள், மிகவும் வித்தியாசமாக மக்களை கவர்ந்திருக்கும் வகையில் பிஷ்ஷிங் லிங்குகளை உருவாக்கி, GPT-4 சேவையை வழங்குவதாக கூறி தந்திரமாக திருடிச் செல்கிறார்கள். 

இவர்கள் அனுப்பும் ஃபிஷ்ஷிங்  மெயிலில், "உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள். இன்றே உங்களுக்கான OpenAI கிரிப்டோ கரன்சியை வாங்குங்கள்" என மின்னஞ்சல் அனுப்பி அவர்களின் தந்தர வலையில் மக்களை விழ வைக்கிறார்கள். இதில் உண்மையான நிறுவனம் அனுப்பியது போன்றே புகைப்படங்களை வைத்து நம்பகத்தன்மையை உருவாக்க முயற்சிக் கிறார்கள். என்னதான் இவர்கள் தந்திரமாக செயல்பட்டாலும், மண்டை மேலே உள்ள கொண்டையை மிஸ் பண்ணுவது போல், இவர்கள் அனுப்பும் ஈமெயிலில் எழுத்து பிழைகள் காணப்படுகிறது. 

கடந்த நான்கு ஆண்டுகளாகவே இது போல் கிரிப்டோகரன்சி மோசடிகள் நடைபெறுவதாகவும். குறிப்பாக டெஸ்லா டோக்கன் மற்றும் ஸ்பேஸ் டோக்கன் என்று போலி கிரிப்டோ கரன்சி விளம்பரங்களைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. 

நீங்கள் GPT-4 ன் ரசிகராகவோ அல்லது கிரிப்டோகரன்சி ஆர்வலராகவோ இருந்தால், இதுபோன்ற திருட்டு கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். மோசடி செய்பவர்களை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் ஏமாந்த பிறகே ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்வீர்கள். எனவே சந்தேகத்துறைக்குரிய இணைப்புகளை கிளிக் செய்து உள்ளே நுழைந்து ஆராய்ச்சி செய்ய வேண்டாம். 

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பவர்கள், இதுபோல் உங்களுக்கு ஏதேனும் மோசடி மின்னஞ்சல்கள் வந்தால், மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொண்டு, விழிப்புடன் இருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com