

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், பரதநாட்டிய முத்திரைகள் மூலம் ரோபோக்களுக்குச் சிறந்த துல்லியமான கை அசைவுகளைக் கற்றுக்கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வு, வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல, ரோபோக்கள் மனித உலகத்துடன் எவ்வாறு செயல்படப் போகின்றன என்ற முக்கியமான கேள்விக்குப் பதில் அளிக்கின்றது.
கினமேட்டிக் சினர்ஜீஸ் (Kinematic Synergies):
ரோபோக்களுக்கு மனித அசைவுகளைக் கற்றுக்கொடுக்கும் இந்த அறிவியல் செயல்பாட்டிற்கு, 'கினமேட்டிக் சினர்ஜீஸ்' Kinematic Synergies என்று பெயர்.
சினர்ஜீஸ் என்றால் என்ன?
மனிதக் கைகளில் சுமார் 20 மூட்டுகள் உள்ளன. ஒவ்வொரு மூட்டும் வேலை செய்ய வேண்டும் என்று மூளை தனித்தனியே கட்டளை அனுப்புவது சிக்கலான விஷயமாகும். இதைக் கடக்க, மூளை இந்தச் சிக்கலான அசைவுகளைச் சிறிய, ஒருங்கிணைந்த அடிப்படை வடிவங்களாக மாற்றுகிறது. இந்த அடிப்படை வடிவங்களே சினர்ஜீஸ் என்று உள்ளது. இது ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களைக் கொண்டு லட்சக்கணக்கான வார்த்தைகளை உருவாக்குவது போன்றது.
பேராசிரியர் ரமணா விஞ்சமூரி தலைமையிலான ஆய்வாளர்கள், நடனக் கலைஞர்களைக் கவனித்த போது ஒரு விஷயத்தைக் கண்டறிந்தனர். நடனக் கலைஞர்கள் வயதானாலும் அதிகச் சுறுசுறுப்புடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களின் தொடர்ச்சியான பயிற்சி. நடன அசைவுகளை ஆராய்ந்தால் சாதாரண ஆரோக்கியமான அசைவுகளை விட ஒரு 'சூப்பர் ஹியூமன்' அசைவுகளின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
விஞ்ஞானிகள் பரதநாட்டியத்தில் உள்ள 30 வகையான ஒற்றைக் கை முத்திரைகளை ஆராய்ந்தனர். இந்த முத்திரைகளிலிருந்து வந்த சினர்ஜீஸ்கள், புதிய சிக்கலான அசைவுகளை ரோபோக்கள் துல்லியமாக உருவாக்க உதவுகின்றன என்று கண்டறிந்தனர்.
ஏன் ரோபோக்களுக்கு மனித அசைவுகள் தேவை?
வருங்காலத்தில் ரோபோக்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் போன்ற எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும். இவற்றுக்கு மனிதக் கை அசைவுகளைக் கற்றுக் கொடுப்பதன் மூலம், மனிதர்கள் வாழும் சூழலில் அவை திறம்படச் செயல்பட உதவுகின்றன.
நமது வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் மனிதக் கை வடிவமைப்பிற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. கதவைத் திறப்பது, ஒரு கருவியைப் பயன்படுத்துவது போன்ற அனைத்து வேலைகளுக்கும் மனிதக் கைகளைப் போன்ற அமைப்பும் அசைவும் ரோபோக்களுக்கும் தேவை.
செயல்திறன்:
நாட்டிய முத்திரைகளைப் பயன்படுத்துவதால், ஒரு ரோபோவின் கையை இயக்கக் குறைவான கட்டுப்பாட்டு வழிமுறைகளே போதும். ரோபோக்களைத் தயாரிக்கவும், அவற்றுக்குக் கட்டளையிடவும் இது மிகவும் செயல்திறன் மிக்கது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதர்கள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளும்போது, அதை ரோபோக்கள் புரிந்து கொள்ளவும், மனிதர்களுடன் இணைந்து வேலை செய்யவும் இந்த அறிவு அவசியம்.
பகுதி ஆட்டோமேஷன்:
மனிதர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்வதற்கு ரோபோக்களுக்கு முத்திரைகள் மூலம் கட்டளைகள் கொடுக்கப்படுவதால், கடினமான அல்லது சலிப்பூட்டும் வீட்டு வேலைகள் (தரையைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், துணிகளை மடித்தல், காய்கறிகள் வெட்டுதல், பாத்திரங்களை கழுவுதல் போன்ற 40% வீட்டு வேலைகளை ரோபோக்கள் செய்யக் கூடும் என்று சொல்கிறார்கள்.
கூட்டுறவு ரோபோக்கள்: Kobots - கோபோட்ஸ்: அடுத்த பத்தாண்டுகளில் ரோபோக்கள் நமக்கு உதவியாளர்களாக, கடினமான வேலைகளைச் செய்து முடிக்கப் பயன்படுத்தப்படலாம். இவை மனிதர்களுடன் இணைந்து செயல்படும் கூட்டுறவு ரோபோக்கள் ஆகும். அதிக துல்லியமான வேலைகளைச் செய்தாலும், மனிதர்களின் மேற்பார்வையும் படைப்பாற்றலும் அவசியமாகும்.
பரதநாட்டிய முத்திரைகள் மூலம் கிடைத்த இந்த அறிவியல் கண்டுபிடிப்பு, இந்தியப் பாரம்பரியக் கலைக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கும் பாலமாக அமைகிறது. ரோபோக்களின் திறனை உயர்த்தி, மனிதர்களின் தினசரி வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு புதிய எதிர்காலம் விரைவில் வரும் எனத் தெரிகிறது.