
சென்ற மாதம் 8ம் தேதி நீங்கள் மதிய உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்?
இந்தக் கேள்விக்கு நீங்கள் துல்லியமாகப் பதிலளிக்கிறீர்கள் என்றால், ஒன்று, உங்களுக்குப் பிரமாதமான நினைவாற்றல் இருக்கவேண்டும். அல்லது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் நீங்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப்பொருட்களையும் குறித்துவைத்துக்கொள்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கவேண்டும். அப்போதுதான் உங்கள் மூளையிலிருந்தோ, கணினியிலிருந்தோ, செல்பேசியிலிருந்தோ, குறிப்பேட்டிலிருந்தோ சட்டென்று அந்த நாளை எடுத்துப் பார்த்து மதிய உணவு என்ன என்பதைக் கண்டுபிடிக்க இயலும்.
இதைத்தான் தொழில்நுட்ப உலகில் தரவுத்தளம் (Data base) என்கிறார்கள். அதாவது, வெவ்வேறு தனிப்பட்ட, தொழில் சார்ந்த தகவல்களைத் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் குறித்துக்கொண்டுவருவது, பின்னர் தேவையானபோது அவற்றை எடுத்துப் பயன்படுத்துவது.
இன்னொரு பக்கம், கட்டமைப்பு ஏதுமற்ற தகவல்களும் நம்மைச் சுற்றிக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் மாலை நேரத்தில் தெருவில் அரை மணிநேரம் நடந்து திரும்புகிறீர்கள் என்றால் அடுத்தடுத்து பலப்பல காட்சிகளைப் பார்ப்பீர்கள். அவற்றுக்கிடையில் எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால், அனைத்தையும் உங்கள் மூளை குறித்துவைத்துக்கொள்ளும்.