சிம் கார்டு வாங்குவதற்கு புதிய நடைமுறைகள் 2024 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
நாட்டில் அனைத்துமே தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துவதற்கு மொபைல் எண் உள்ளிட்ட தொலைத்தொடர்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆனால் இதைப் பயன்படுத்தி பல மோசடி சம்பவங்களும் நடப்பதால், சிம்கார்டு வாங்குவதில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இப்போது நமது நாட்டில் டிஜிட்டல் இணைப்பு என்பது பொருளாதாரம், சமூகம் மற்றும் மாற்றத்திற்கான அடித்தள இயக்கத்திற்கு உதவுகிறது. இதில் மொபைல் பயன்பாடு அவசியமென்பதால், மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொலைத்தொடர்பு வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதன்படி இனி சிம் கார்டு வாங்குவதற்கு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு மசோதாவில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. அதன்படி 2024 ஆம் ஆண்டு முதல் புதிய சிம் கார்டு வாங்குவதற்கு புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டு வருகிறது. இனி ஒருவர் புதிய சிம் கார்டை வாங்குவதற்கு தேவையான அடையாள சான்றாக பயோமெட்ரிக் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஒருவர் தனது ஆதார் எண்ணை பயன்படுத்தி, கேஒய்சி பூர்த்தி செய்து, பயோமெட்ரிக் அடையாளங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இனி சிம் கார்டு வாங்க முடியும். இதற்காக ஜனவரி 1ம் தேதி முதல் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சிம் கார்டு வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களின் பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
இதை மீறி தவறான முறையில் சிம்கார்டு வாங்கி அது நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.