என்னதான் உலகில் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரித்துவிட்டாலும், அதன் முன்னோடியாக இருந்த Bluetooth பற்றி நாம் அறிந்துகொள்வது முக்கியமாகும். அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் யாராவது ப்ளூடூத் என்றால் என்ன? எனக் கேட்டால், ஏதோ பல் சம்பந்தமான பொருளாக இருக்கும் என சொல்லி இருப்பீர்கள். ஆனால் இன்று ப்ளூடூத் என்றால் தெரியாத நபர்களே இல்லை.
தற்போது நாம் தூங்கும் நேரம் தவிர்த்து எல்லா நேரத்திலும் ப்ளூடூத் நம்முடைய வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஆனால் 90களில் வீட்டில் ஒரு கணினி இருந்தால், அதன் பின்னால் பாம்புகள் போல பல ஒயர்கள் பின்னிப் பிணைந்திருக்கும். என்றாவது ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யும்போது, அவற்றை கழற்றி சுத்தம் செய்து மாட்டுவதற்கே பாதி நேரம் போய்விடும். இத்தகைய ஒயர்களிடம் மக்கள் சிக்கி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒருவர் மட்டுமே இவை அனைத்தையும் மாற்றி முற்றிலும் வயர்லெஸ் யுகத்துக்கு மாறுவது பற்றி யோசித்தார்.
1990களில் சோனி எரிக்சன் நிறுவனத்தின் ஆய்வகத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த 'ஹார்ட்சன்' என்பவனிடம், சாதனங்களை இணைக்கும் சிக்கலான கேபிள்களுக்கு மாற்றாக, குறுகிய தூர வயர்லெஸ் தொழில்நுட்பம் உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட 'ஹார்ட்சன்' பல வருடங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இறுதியில் Frequency Hopping என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி வயர்லெஸ் சிஸ்டத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த சாதனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது, அவருக்கு 'ப்ளூடூத்" என்ற பெயர் மனதில் உதித்துள்ளது. பத்தாம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்ட King Harald Blatan என்ற மன்னன், பல உடைத்த ராஜ்யங்கள் ஒன்றாக இணைத்து மாநிலமாக மாற்றிஉள்ளார். இதன் காரணமாகவே அவருடைய பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நினைக்கலாம். அவருடைய பெயரில் ப்ளூடூத் என்று எதுவும் இல்லையே என.
இதற்கும் ஒரு கதை உண்டு. அதாவது King Harald Blatan-ன் முன் பற்கள் எல்லாம் சொத்தை பிடித்து நீல நிறத்தில் இருக்குமாம். மன்னர் என்பதால் அவரை வெளிப்படையாக ப்ளூடூத் வாயன் என்று கிண்டல் செய்ய முடியாத மக்கள், அவரை செல்லமாக ப்ளூடூத் மன்னா என அழைத்திருக்கிறார்கள் அதாவது Bla என்றால் டேனிஷ் மொழியில் நீலம் எனப் பொருள். இப்படிதான் ப்ளூடூத் என்ற பெயர் வந்துள்ளது.
தற்போது மக்களின் அன்றாடம் பயன்பாட்டில் அதிகமாக இயங்கி வரும் ப்ளூடூத் டெக்னாலஜி. உலக அளவில் இதன் அங்கீகாரம் விகிதம் 96 சதவீதமாக உள்ளது. அதாவது உலகம் முழுவதும் 96 சதவீத மக்கள் ப்ளூடூத் லோகோவை அடையாளம் கண்டுக்கொள்கின்றனர். இதில்தான் தற்போது பல கருவிகள் இணைக்கப்படுகிறது. ஸ்பீக்கர்கள், ஹெட்போன், ஏர்பாட்ஸ், கேமிங் கண்ட்ரோலர்கள், மவுஸ், கீபோர்டு, இணைய இணைப்புகள், கோப்புகளை பரிமாறுவது, வீடியோ ஷேரிங் என அனைத்தையுமே தனி ஆளாக சமாளிக்கிறது ப்ளூடூத்.
முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம்தான், நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. இதன் முன்னேற்றம் மாறிவரும் தொழில்நுட்ப எல்லைகளைத் தாண்டி மேலும் விரிவடைந்துகொண்டே போகும் என நம்பப்படுகிறது.