BMW iX Flow: உலகின் முதல் கலர் மாறும் கார்!

BMW iX Flow: உலகின் முதல் கலர் மாறும் கார்!

உலகின் முன்னணி கார் நிறுவனங்களின் ஜாம்பவான் BMW. இந்நிறுவனம் தனது முதல் கலர் மாறும் காரை வெளியிட்டுள்ளது. இனி ஒரே கலர்ல கார் ஓட்ட வேண்டாம். கலர் மாத்தி ஓட்டி, நம்ம கிட்ட நிறைய கார் இருக்கிற மாதிரி வெளிய காட்டிக்கொள்ளலாம். 

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் BMW நிறுவனம் நம் விருப்பம் போல் கலரை மாற்றிக் கொள்ளும் காரை வெளியிட்டது. இதை பயன்படுத்தி ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப காரின் வெளிப்புறத்தை மாற்றிக் கொள்ள முடியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே மாற்ற முடியும். தற்போதைக்கு இதை ஓர் தொடக்க நிலை எனவும், எதிர்காலத்தில் பல நிறங்களில் மாற்றும் வகையில் இது மேம்படுத்தப்படும் என்றும் BMW நிறுவனத்தினர் தெரிவித்தனர். 

இந்த வாகனத்தின் மேற்புறத்தில்  பெயின்ட்டுக்கு பதிலாக அமேசான் கிண்டில் புத்தகத்தில் இருப்பது போலவே 'டிஜிட்டல் பேப்பர்' ஒட்டப்பட்டிருக்கும். இவற்றிற்கு சில மின்சார அதிர்வுகள் கொடுப்பது மூலமாக, தன் வண்ணங்களை மாற்றிக்கொள்ளும். எந்த நிறத்திற்கு மாற்றுகிறோமோ அந்த நிறம் நீண்ட நேரம் இருக்க, தொடர்ந்து டிஜிட்டல் பேப்பர்களுக்கு மின்சாரம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நிறத்தை அதுவே மாற்றிக்கொள்ளும். வெயில் காலத்தில் வெப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிறத்திலும், குளிர்காலத்தில் வெப்பத்தை உள்ளே ஈர்க்கும் வகையில் கருப்பு நிறத்திலும் மாறிவிடும். இதனால் காரின் உள்ளே பயணிப்பவர் சொகுசாக பயணிக்கலாம்.

பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேப்பர் MIT மாணவர்களால் உருவாக்கப்பட்டது. பாரம்பரிய அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் நிறமி தான் இதில் பிரதானப் பொருளாக செயல்படுகிறது. இந்த டிஜிட்டல் பேப்பரில் லட்சக்கணக்கான மைக்ரோ கேப்சூல்கள் உள்ளன. அவை எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட வெள்ளை நிறமிகள் மற்றும் நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட கருப்பு நிறமிகளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த கேப்சூல்கள் தான் மின்சாரத்தால் தூண்டப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணத்தை மேற்பரப்புக்கு தூண்டுகிறது.  

இதற்காகவே BMW நிறுவனம் ஒரு முக்கோண கண்ணாடி வடிவத்தைப் பயன்படுத்தி, ஜெனரேட்டிவ் அல்காரிதம் மூலமாக டிஜிட்டல் பேப்பர்களை உருவாக்குகிறது. பின்னர் லேசர் உதவியோடு பல துண்டுகளாக துல்லியமாக வெட்டப்பட்டு, மின்புலத்தை தூண்டுவதற்கான இணைப்புடன் இணைக்கப்படுகிறது. இதனோடு மின்சாரம் இணைக்கப்பட்டவுடன் ஒவ்வொரு வண்ணமும் சரியாக மாறுகிறதா என்று கண்காணிக்கப்பட்டப் பின்னரே காரோடு பொருத்தப்படுகிறது. 

இந்த அம்சம் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை என்றாலும். எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்தி காரின் ஒவ்வொரு பாகங்களையும் கலர் மாறும் வகையில் வடிவமைக்கலாம். குறிப்பாக காரின் உட்புறத்தில் பல்வேறு விதமான வண்ணங்களில் நாமே மாற்றிக் கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் என்று BMW தரப்பில் கூறியுள்ளார்கள். 

இந்த தொழில்நுட்பம் மட்டும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால் எப்படி இருக்கும்? கார்கள் அனைத்தும் அவ்வப்போது ஒவ்வொரு வண்ணத்தில் ரோட்டில் சுற்றிக் கொண்டிருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com