நிலவில் லேசர் வைத்து சாலை அமைக்கலாம் வாங்க!

road on the moon
road on the moon

என்னதான் வேற்று கிரகத்தில் மனிதர்கள் வாழலாம், குறிப்பாக சந்திரனை மனிதர்களுக்கான மற்றொரு பூமியாக மாற்றலாம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் பல விஷயங்களைக் கூறினாலும், அவ்வளவு எளிதாக சந்திரனில் மனிதர்களால் தங்கிவிட முடியாது. ஆம் சந்திரன் ஒன்றும் நமக்கு சொந்தக்கார வீடு அல்ல. சந்திரனில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சு தூசிகள் நிறைந்துள்ளது. இது விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ் சூட்டிலேயே ஒட்டிக்கொண்டு அதை சேதப்படுத்தும் தன்மை கொண்டது. 

அப்போலோ திட்டத்தின்போது நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பாதிக்கப்பட்ட ஹாரிசன் என்பவர் இதை 'லூனார் ஹை ஃபீவர்' என அழைக்கிறார். எனவே மனிதர்கள் நிலவில் வசிக்க வேண்டும் என்றால் ஒரு திடமான தரைத்தளம் வேண்டும். அதேபோல மனிதர்கள் நினைவில் தங்குவதற்கான காலனி அமைக்கும்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பாதுகாப்பான, திடமான சாலை தேவைப்படும். எனவே சந்திரனில் உள்ள மண்ணையே திடப்படுத்தும் வழியை விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர். 

இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆய்வுக்குழு, சந்திரமண்ணை திடமாக மாற்ற முடியுமா என ஆய்வு செய்து வருகிறது. மேலும் அவர்கள் கார்பன் டையாக்சைடு லேசரைப் பயன்படுத்தி இதை செய்ய முடியும் என்ற சாத்தியக்கூறையும் கண்டறிந்துள்ளனர். இதற்காக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது உண்மையிலேயே சந்திரமண்ணை பயன்படுத்தவில்லை. இதற்காக ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி உருவாக்கிய சந்திர மண்ணுக்கு நிகரான பொருளை பயன்படுத்தி அதை கெட்டியாக்க முடியும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர். 

மொத்தம் நான்கு இன்ச் அளவு கொண்ட 12 கிலோ வாட் ஆற்றலை வெளியிடும் லேசர் மூலமாக, நிலவின் மண்ணை கடினமாக்கலாம். இதைப் பயன்படுத்தி நிலவில் கடினமான ஒரு சாலை அமைப்பை உருவாக்க முடியும். எனவே இந்த முறையைப் பயன்படுத்தி நிலவில் ஏவுதளம் அல்லது சாலை போன்ற மேற்பரப்பை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இதே போல வேறு ஏதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலவின் மண்ணை கடினமாக்க முடியுமா என்றும் விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com