டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டு வரும் காலத்தில் மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அவற்றின் பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் போனவை ஆகும். இருப்பினும் ஆப்பிள் சாதனங்களை யாராலும் ஹேக் செய்யவே முடியாதா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு பாதுகாப்பான சாதனங்களை வழங்குவதில் அவர்களின் முழு பங்களிப்பை மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர். யாராலும் ஹேக் செய்ய முடியாத தரவுகள், வலுவான பாஸ்வோர்ட், ஃபேஸ் ஐடி, டச் ஐடி என அந்நிறுவனம் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நற்பெயர் பெற்றது. இதற்காகவே அவர்கள் தங்களின் சொந்த இயங்குதளமான iOS-ஐ பயன்படுத்துகிறார்கள். இதில் இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்த போதிலும், இதை யாரும் ஹேக் செய்ய முடியாது என நாம் சொல்ல முடியாது.
பல காலமாகவே ஹேக்கிங்கிற்கு எதிராக ஆப்பிள் சாதனங்களால் வெல்ல முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 2016 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய ஒருவர் பயன்படுத்திய ஐபோனை அன்லாக் செய்ய FBI ஆப்பிள் நிறுவனத்தை கேட்டபோது, இது பயனரின் தனியுரிமைக் கொள்கையை மீறும் விதம் என்பதால் அதை ஆப்பிள் மறுத்தது. இறுதியில் FBI ஆப்பிள் நிறுவனத்தின் உதவி இல்லாமலேயே அந்த ஐபோனை அன்லாக் செய்யும் வழியைக் கண்டறிந்தனர்.
மேலும் iOS இயங்குதளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஹேக்கர்கள் அதைப் பயன்படுத்தி ஐபோன் சாதனத்தில் உள்ள தரவுகளை அணுகிய நிகழ்வுகளும் நடந்துள்ளது. என்னதான் பலவிதமான பாதுகாப்பு அம்சங்களை ஆப்பிள் தங்கள் சாதனங்களில் கொண்டு வந்தாலும், அனைத்திலும் ஜித்தனுக்கு ஜித்தன் என்று ஒருவன் இருக்கத்தான் செய்வான். ஆப்பிளில் உள்ள எல்லா பாதுகாப்பு அம்சங்களையும் உடைக்க நிபுணத்துவம் கொண்டவர்களால் முடியும் என பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹாக்கிங்கில் மனிதர்களின் பங்களிப்பு முக்கியமான அங்கமாகும். ஒருவர் தனது சாதனத்தை ஹேக் செய்வதற்கான அணுகலை அவருக்கே தெரியாமல் கொடுக்கும்போது, எந்த சாதனமாக இருந்தாலும் அதை ஹேக் செய்யலாம். குறிப்பாக ஃபிஷிங் தாக்குதல் மூலமாக பயனர்களை ஏமாற்றி அவர்களது ஐபோனின் கடவுச்சொல் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஹேக்கர்கள் தெரிந்துகொள்ள முடியும். இது அவர்களை தொலைவிலிருந்தே ஐபோனை அனுப்புவதற்கான நுழைவு வாயிலை ஏற்படுத்துகிறது.
எனவே ஆப்பிள் சாதனங்களை ஹேக் செய்ய முடியுமா? என்று கேள்விக்கு கட்டாயம் முடியும் என்பதே பதிலாகிறது. இதில் விழிப்புடன் இருக்க வேண்டியது இத்தகைய சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள்தான். அவர்கள் அவ்வப்போது தங்களின் சாதனத்தை அப்டேட் செய்ய வேண்டும். மேலும் தங்களுக்குத் தெரியாதவர்களிடம் எந்த விதமான தகவலையும் பரிமாறக்கூடாது. ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக இணைய பாதுகாப்பு என்பது எப்போதும் ஒரு கேள்விக்குறி தான்.
எனவே நாம் தான் அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.