
செயற்கைகோள் விண்வெளியிலிருந்து தகவல் தொடர்பு, தட்பவெப்பநிலை மற்றும் பல தகவல்களைச் சேகரித்து அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும். பல நாடுகள் அனுப்பும் செயற்கைக்கோள்கள் பிற நாட்டின் நிலப்பரப்பைப் படம் பிடித்து ஒரு உளவாளியாக செயல்படுகிறதா? இதற்கு ஏதேனும் அனுமதி தேவைப்படுமா?
அனைத்து செயற்கைக்கோள்களும் உளவுபார்க்கின்றனவா?
செயற்கைக்கோள்கள் நீண்ட காலமாக தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, நாட்டின் தேசிய பாதுகாப்பையும் வடிவமைக்கின்றன. ஒரு நாடு அனுப்பும் செயற்கைக்கோள் மற்றொரு நாட்டின் படங்களைப் பிடிக்க முடியுமா? ரகசிய உளவாளிகளாக செயல்பட முடியுமா?
இதற்கான பதில் அந்தந்த நாடுகள் பயன்படுத்தும் மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச விதிமுறைகளில் வேரூன்றியுள்ளது. பாதுகாப்பு அல்லது உளவு நோக்கங்களுக்காக ஏவப்பட்ட பல செயற்கைக்கோள்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு அப்பால் உள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் திறன் கொண்ட மிகவும் அதிநவீன கேமராக்களைக் கொண்டுள்ளன.
அந்தந்த அரசாங்கங்கள் இந்த செயற்கைக்கோள்களை உளவுத்துறை சேகரிப்பு, பிற நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ராணுவ நகர்வுகளைக் கண்காணிக்கவும் பயன்படுத்துகின்றன.
செயற்கைக்கோள் கண்காணிப்பைத் தடைசெய்யும் வெளிப்படையான உலகளாவிய சட்டங்கள் என்று எதுவும் இல்லை. காரணம் 1967ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம்படி (The Outer Space Treaty of 1967) விண்வெளியை அனைத்து நாடுகளும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் விண்வெளிக்கு அனுப்பப்படும் பொருட்கள் எந்த ஒரு தடையும் இன்றி அனைத்து பகுதிகளுக்கும் செல்லலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. ஆக, விண்வெளியில் இருந்து மற்ற நாடுகளைக் கண்காணிப்பதற்கு தடை ஏதும் இல்லை.
வேறொரு நாட்டின் மேல் சுற்றி வருவதற்கு அனுமதி தேவைப்படுமா?
சுற்றுப்பாதை இயக்கத்தைப் பொறுத்தவரை செயற்கைக்கோள்களுக்கு என்று பிராந்திய கட்டுப்பாடுகள் (Territorial restrictions) இல்லை.
ஒரு நாட்டின் வான்வெளியில் நுழைய விமானங்களுக்கு அனுமதி தேவைப்படும். ஆனால், செயற்கைக்கோள்களுக்கோ ஒரு நாட்டின் மேல் செல்ல ஒப்புதல் ஏதும் தேவையில்லை. அவை அவற்றின் ஏவுதளப் பாதை (Trajectory) மற்றும் ஈர்ப்பு விசைகளின் (Gravitational forces) அடிப்படையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட சுற்றுப்பாதைகளைப் பின்பற்றும். அதாவது அவை ஒரு நாட்டின் மீது நிலையாக இருப்பதற்கு பதிலாக பூமியைத் தொடர்ந்து வட்டமிடுகின்றன. ஆனால், சில செயற்கைக்கோள்கள் குறிப்பாக புவிசார் சுற்றுப்பாதையில் (Geostationary orbit) உள்ளவை தகவல் தொடர்பு சேவைகளை எளிதாக்க ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்தப்படுகின்றன.
பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் (Low Earth orbit) உள்ள மற்ற செயற்கைகோள்கள் ஒரு நாளைக்கு பலமுறை பூமியைச் சுற்றி வருகின்றன. இவை தரவு மற்றும் படங்களை மிகப் பெரிய அளவில் கைப்பற்றும் திறன் கொண்டவையாக இருக்கும். காரணம் இந்த கட்டுப்பாடற்ற இயக்கம்தான் உலகளாவிய கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு என்று உலகத்தை காக்க கைகொடுக்கின்றன.
எல்லா நாடுகளாலும் தங்களைக் கடந்து செல்லும் செயற்கைக்கோளைக் கண்காணிக்க முடியுமா?
அனைத்து நாடுகளும் தங்கள் எல்லை வழியாக செல்லும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கவோ அல்லது தொடரவோ முடியாது. சில சக்திவாய்ந்த விண்வெளி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்தான் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்க தரை பகுதிகளில் பல கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இதனால்தான் சுற்றுப்பாதையில் (Orbit) அரங்கேறும் சில வெளிநாட்டு நடவடிக்கைகள் சில நேரங்களில் உலகிற்கு வெளிப்படுகின்றன.
வரையறுக்கப்பட்ட விண்வெளி உள்கட்டமைப்பு பெரிய அளவில் இல்லாத நாடுகளில் இத்தகைய கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் இது தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகளுக்கு சுலபமான ஒன்று.
எனவே,செயற்கைக்கோள்கள் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன. அமைதியாக மேலிருந்து நம்மை கண்காணிக்கதான் செய்கின்றன. ஆனால் எந்தவிதத்திலும் மற்ற நாடுகளுக்கு தீங்காகவோ அல்லது பிரச்னையாகவோ இருக்காது. மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காகத்தான் இவை செயல்படுகின்றன.