ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் குழந்தைகள். பெற்றோர்களே உஷார்!

online Games Addiction
online Games Addiction
Published on

முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் வெளியே சென்று விளையாடுவது வாடிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது விளையாட்டு என்றாலே செல்போன்களிலும், கணினிகளிலுமே அடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் இணைய விளையாட்டுகளில் மூழ்கி, அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வீட்டிலேயே சௌகரியமாக அமர்ந்துகொண்டு ஆன்லைன் கேம் விளையாடுவது பலருக்கு பழக்கமாகி விட்டது. அது என்னதான் நமக்கு மிகச் சிறந்த அனுபவங்களைக் கொடுத்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற முதுமொழியை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஆன்லைன் விளையாட்டுகள் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் தாண்டி, அது மிகப்பெரிய அடிமைத்தனமாக நாளடைவில் மாற வாய்ப்புள்ளது. இதில், குழந்தைகளிடம் இணைய விளையாட்டு மோகம் அதிகம் காணப்படுவது கவலைக்குரிய விஷயமாகும். 

தற்போது எல்லா வீடுகளிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுகிறது, தன் பெற்றோரின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டு விளையாடுவது அதிகரித்துள்ளது. பெற்றோரும் குழந்தைகள் வீட்டில் அமைதியாக இருக்கிறார்கள் என்று இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இதனால் குழந்தைகள் அதிகம் விளையாடும்போது மனநலம் கூட பாதிக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். லண்டனில் வீடியோ கேமுக்கு அடிமையான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே கிளினிக் ஒன்றும் இருக்கிறதாம். சமீப காலமாக அங்கே வழக்கத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இணைய விளையாட்டுக்கு அடிமையான குழந்தைகள் சிகிச்சைக்காக வருகிறார்களாம். 

2020 இல் தொடங்கப்பட்ட இந்த சிகிச்சை மையத்தில், 50 பேராவது சிகிச்சைக்கு வருவார்களா என நினைத்திருந்த நிலையில், தொடங்கிய சில மாதங்களிலேயே 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வந்துள்ளனர். இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகிய குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பதுடன், வீட்டில் உள்ளவர்களிடம் வன்முறையுடன் நடந்துகொள்பவராக மாறுவார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 12 முதல் 17 வரை உள்ள பருவ வயது குழந்தைகள்தான் இதுபோன்ற இணைய விளையாட்டுகளுக்கு அதிகம் அடிமையாகி வருகிறார்கள். 

குழந்தைகளை ஆன்லைன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவர்களின் சக வயது குழந்தைகளுடன் மைதானத்திற்கு சென்று விளையாடுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். ஓடி ஆடி விளையாடினால் தான் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் அவர்கள் ஆன்லைன் விளையாட்டு அதிகம் விளையாடத் தொடங்குவதற்கு முன்பே, கல்வி மற்றும் மற்ற விஷயங்கள் மீதான ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும்படி பெற்றோர்கள் வழிநடத்த வேண்டும். 

அவர்களுக்கு வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், இணைய விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் நன்றாக எடுத்துரைத்து புரிய வைத்தாலே, அவர்களுக்கான நல்ல பாதையை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். இதை எல்லா பெற்றோர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com