சரிந்து வரும் ட்விட்டர் X தளத்தின் சாம்ராஜ்யம் ஒரு பார்வை!

Twitter X
Twitter X
Published on

ட்விட்டர் தளத்தை வாங்கியதிலிருந்தே அவருக்கு பெரும் பிரச்சனைதான் எனலாம். அவர் அந்த நிறுவனத்தை வாங்கியது முதல் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் செய்ததன் எதிரொலியாக அந்நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கும் கீழாக சரிந்துவிட்டது. 

தற்போது ட்விட்டர் எக்ஸ் நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறியுள்ள தகவலின்படி, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு 19 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. தோராயமாக ஒரு பங்கின் விலை 45 டாலராக உள்ளது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார். ஆனால் இப்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கும் கீழாக குறைந்து சரிவை சந்தித்து வருகிறது. 

அவர் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்தே ட்விட்டரில் பணியாற்றிய பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் பலர் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து எலான் மஸ்க் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என்று மாற்றி பயனர்கள் பயன்படுத்தும் விதிமுறைகளில் பல மாற்றங்கள் கொண்டு வந்தார். இதனால் நிறுவனத்தின் விளம்பர வருவாய் பாதிக்கும் மேலாக இழப்பை சந்தித்தது. 

பார்ச்சூன் என்ற மதிப்பீட்டு நிறுவனத்தின் தரவுகள்படி, ட்விட்டர் எக்ஸ் தளம் எலான் மஸ்கிடம் சென்றதிலிருந்து அதன் நிதி நிலையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும்போது அதன் பங்குகள் மற்றும் கடன் அடிப்படையில் மொத்த மதிப்பு 44 பில்லியன் டாலராக இருந்தது. 

அதை எலான் மஸ்க் வாங்கிய மறுகணமே அந்நிறுவனம் 13 பில்லியன் டாலர் கடனில் சிக்கியது. மேலும் காலப்போக்கில் அவரது பல விபரீத முடிவுகளால் அந்நிறுவனத்துக்கு கிடைத்த வருவாயில் 60% வீழ்ச்சி ஏற்பட்டது. ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய கடனுக்காக ஆண்டிற்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்தது. 

எக்ஸ் நிறுவனம் விளம்பர வருவாயில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பிரீமியம் சேவை வழங்கி சந்தா வசூலிப்பதில் கவனம் செலுத்தியது. ஆனால் இந்த மாதாந்திர பிரீமியம் சேவையை இதுவரை 1 சதவீதத்திற்கும் குறைவான பயனர்களே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 120 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே உள்ளது. இதை சரி செய்யவே ஷாப்பிங் மற்றும் பேமெண்ட் போன்ற புதிய வசதிகளைக் கொண்டுவந்து அதன் வருவாயை கூட்டுவதற்கு எலான் மஸ்க் முயற்சித்து வருகிறார். 

இருப்பினும் அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே எதிர்பார்த்த பலனைக் கொடுக்காததால், தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது எக்ஸ் தளம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com