மொபைல் ஆப் பயன்படுத்தி கள்ள நோட்டு. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க? 

Counterfeit notes using mobile app.
Counterfeit notes using mobile app.

மொபைல் செயலியைப் பயன்படுத்தி 200 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து, அதை அப்படியே சாதாரண கலர் பிரிண்டரில் அச்சடித்து, 20 லட்சம் ரூபாய் வரை கள்ள நோட்டு தயாரித்த வினோத கும்பல் மேட்டூர் பகுதியில் சிக்கியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஓர் இறைச்சி கடையின் மூலம் இந்த கள்ள நோட்டு விவகாரம் வெளியே வந்துள்ளது. இப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருபவர் அண்ணாதுரை. வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையில் இவரது கடைக்கு அதிகப்படியான மக்கள் இறைச்சி வாங்க வந்துள்ளனர். அதில் இவரது கடைக்கு இறைச்சி வாங்க வந்த ஒரு நபர் தான் வாங்கிய இறைச்சிக்காக மூன்று 200 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்திருக்கிறார். அந்த நோட்டுக்களை அண்ணாதுரை கையில் வாங்கியதுமே சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. அதை அவர் சோதித்துப் பார்த்தபோது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. 

உடனே அவர் சத்தம் போட்டதால், அருகில் இருந்த மக்கள் கள்ள நோட்டு கொடுத்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டு அந்த நபரை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கே போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உபைஸ் அலி என்பது தெரியவந்தது. இவர் மேட்டூரில் ஒருவருடைய ஃபேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த ஃபேன்சி ஸ்டோரிலும் விசாரணை நடத்தப்பட்டது. 

அங்கே போலீசார் செய்த சோதனையில் சாதாரண கலர் பிரிண்டர் மூலமாக அங்கே கள்ள நோட்டுகள் அச்சடிப்பது தெரியவந்தது. இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ஸ்மார்ட்போனில் ஸ்கேனிங் செயலியைப் பயன்படுத்தி, 200 ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து, பார்ப்பதற்கு அசல் போலவே இருக்கும் கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். இதே முறையை பின்பற்றி 20 லட்சம் வரை கள்ள நோட்டுகள் அச்சடித்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். 

அச்சடித்த போலி நோட்டுக்களை இவர்கள் பல நாட்களாக பல இடங்களில் புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இப்படிதான் கள்ள நோட்டை மாற்றுவதற்காக கறிக்கடையில் 200 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தபோது, இவர்களுடைய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுக்கும் வேறு ஏதேனும் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com