
நவீன மருத்துவத்தில் நோய்களைக் கண்டறிவதில் சி.டி. ஸ்கேன் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த அதிநவீன பரிசோதனை முறை குறித்து வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜமா இன்டர்னல் மெடிசின் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வின்படி, சி.டி. ஸ்கேன் கதிர்வீச்சு வெளிப்பாடு காரணமாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு அனைத்து வயதினருக்கும் ஒரே மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு கதிர்வீச்சினால் ஏற்படும் புற்றுநோய் அபாயம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சி.டி. ஸ்கேன் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சி.டி. ஸ்கேன்கள் எதிர்காலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலின் உள்ளுறுப்புகள், தசைகள் மற்றும் எலும்புகளின் நிலையை துல்லியமாக கண்டறிய உதவும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை பல நேரங்களில் உயிர்காக்கும் மருத்துவ முறையாகவும் விளங்குகிறது. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் குறைந்த அளவிலான அயனியாக்கும் கதிர்வீச்சு கூட புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
கம்ப்யூட்டட் டோமோகிராஃபி எனப்படும் சி.டி. ஸ்கேன், எக்ஸ்-கதிர்கள் மற்றும் கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடலின் குறுக்கு வெட்டுப் படங்களை உருவாக்குகிறது. இது மருத்துவர்களுக்கு நோய்கள் மற்றும் காயங்களை துல்லியமாக கண்டறிய உதவுகிறது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் புதிதாக கண்டறியப்படும் புற்றுநோய்களில் சுமார் 5 சதவீதம் சி.டி. ஸ்கேன் காரணமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக அளவு கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குறைந்த அளவிலான கதிர்வீச்சுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாகக் கூற போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இருப்பினும், அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அணுமின் நிலைய விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நீண்ட கால ஆய்வுகளின் மூலம் இந்த சாத்தியக்கூறுகள் தெரியவந்துள்ளன.
உதாரணமாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சி.டி. ஸ்கேன்கள் எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில், ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பில் கதிர்வீச்சுக்கு ஆளானவர்களில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து சற்று அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, சி.டி. ஸ்கேன் தேவைப்படும்போது அதைத் தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும், அதன் சாத்தியமான ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம். மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் பரிந்துரைக்கும்போது அதன் அவசியம் மற்றும் சாத்தியமான அபாயங்கள் குறித்து நோயாளிகளுக்கு விளக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கும்போது கூடுதல் கவனம் தேவை.