இடி, மின்னலை முன் கூட்டியே உணர்த்தும் 'தாமினி' செயலி!

Damini app
Damini app

நாளுக்கு நாள் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், அணுகுமுறைகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. அனைத்தையும் உள்ளங்கையில் அடக்கி ஆள்கிறது தொழில்நுட்ப உலகம். அதற்கு மிகச் சிறந்த சான்றாக ஸ்மார்ட்போனை எடுத்துரைக்கலாம். ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் போதும் அனைத்தையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அவ்வகையில், இடி மின்னலைக் கூட எளிதாக அறிந்து கொள்ள உதவும் 'தாமினி' என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இடி, மின்னல் குறித்து மிகத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கு, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தாமினி மொபைல் செயலி பொதுமக்கள் இடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. அனைத்து மாநில மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் செயலியை பலரும் பயன்படுத்தி வருவதால் இனிவரும் மழைக்காலங்களில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இடி, மின்னல் விழும் மிகச் சரியான இடம் மற்றும் அந்த இடத்தின் அடிப்படையில், சுமார் 40 சதுர கி.மீ. சுற்றளவில் இடி, மின்னல் வர வாய்ப்பு இருக்கும் பகுதிகளையும், இதன் அசைவு மற்றும் திசையையும் தாமினி செயலியில் அறிந்து கொள்ளலாம்.

நாம் வசிக்கும் இடத்திலிருந்து, சுமார் 20 கி.மீ. சுற்றளவில் இடி, மின்னலுக்கு ஏதேனும் வாய்ப்புகள் இருந்தால், கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு முன்னரே, இந்த மொபைல் செயலி நமக்கு எச்சரிக்கை செய்து விடும். பலத்த இடியுடன் கூடிய கனமழையின் போது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடி, மின்னல் குறித்த சில பொதுவான தகவல்களை அனைத்து மாநில மொழிகளிலும் தாமினி செயலி வழங்குகிறது.

புனேயில் இருக்கும் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) தான் இந்த தாமினி மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது. IITM, மத்திய செயலாக்க அலகு உடன் இணைத்து, GPS உதவியுடன், நாட்டில் 48-க்கும் அதிகமான மையங்களில் இருக்கும் “லைட்டனிங் லொகேஷனை” (Lightning Location) பயன்படுத்தி தாமினி செயலி செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண்ணைப் பார்க்க வேண்டுமா? வாருங்கள்!
Damini app

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமினி செயலி வெளியிடப்பட்டது. இருப்பினும் அப்போது மாநில மொழிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இதனால், மக்களிடையே பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால், தற்போது தாமினி மொபைல் செயலியில் மாநில மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது. இடி, மின்னலை அறிந்து கொள்ள உதவும் தாமினி மொபைல் செயலியை இதுவரையில் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இடி, மின்னல் எச்சரிக்கையை முன்னரே அளிக்கும் சில தனிப்பட்ட மொபைல் செயலிகள் தற்போது வழக்கத்தில் உள்ளன. அதில் சில செயலிகள் உலகளவில் இயங்கி வருகின்றன. 2012 ஆம் ஆண்டில் அறிமுகமான 'வெதர் அண்ட் ரேடார் ஸ்டோர்ம் அலெர்ட்ஸ்' (Weather and Radar Strom Alerts) மொபைல் செயலியில் சுமார் நூறு மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டில் அறிமுகமான 'லைட்டனிங் அலாரம் வெதர் பிளாசா' (Lightening Alarm Weather Plaza) மொபைல் செயலியில், தற்போது சுமார் 10 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். 2016 ஆம் ஆண்டில் அறிமுகமான “தண்டர் ஸ்டோர்ம் வெதர்வார்னிங்” (Thunder Strom Weather Warning) மொபைல் செயலியில் சுமார் ஒரு லட்சம் பயனாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com