டார்க் வெப்பும், ஆதார் அட்டையும்!

Dark Web and Aadhaar Card
Dark Web and Aadhaar Card

இந்தியாவில் மிகப்பெரிய தரவுமீறல் டார்க் வெப்-ல் நடந்துள்ளது. சுமார் 80 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் ஆதார் விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது. 

Dark Web என்பது இணையத்தில் நடந்து வரும் கள்ள சந்தை. இதில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல விஷயங்கள் தவறான முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒருவரின் வங்கி விவரங்கள் முதல், அணு ஆயுதங்கள் வரை டார்க் வெப்பில் விற்பனை செய்கிறார்கள். இதில் விற்பனை செய்வதும், வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், பல பில்லியன் டாலர்கள் மதிப்பான வணிகம் இதில் நடந்து வருகிறது என்பதே உண்மை. 

இந்த தளத்தில் தற்போது 80 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் ஆதார் விவரங்கள் கசிந்துள்ளது. குறிப்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவு தளத்திலிருந்து நேரடியாக இந்த தகவல்கள் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் இது எப்படி வெளியே போனது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இதை கண்டுபிடித்தது அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசெக்கியூட்டி. 

இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்திலேயே டார்க் வெப்பில் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் விற்பது சார்ந்த வலைப்பதிவை வெளியிட்டது. Threat Actor என்ற ஹாக்கர் 15 மில்லியன் ஆதார் விபரங்களை 80,000 டாலர்களுக்கு விற்பனம் செய்வதாக வெளியிட்ட விளம்பரத்தை அந்நிறுவனம் கண்டறிந்தது. 

ஹேக்கர்கள் பகிர்ந்த தரவுகளில் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் கொடிக்கணக்கான இந்தியர்களின் தொலைபேசி எண், பெயர் மற்றும் முகவரிகள் உள்ளது. கொரோனா காலத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் சேகரித்த தரவுல்களிலிருந்து இந்தத் தகவலை ஹேக்கர்கள் எடுத்துள்ளனர். இப்படி கசிந்த தரவுகளில் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான கோப்புகள் உள்ளதாக ஹேக்கர்கள் கூறுகின்றனர். 

எனவே இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு, இந்திய மருத்துவ கவுன்சிலை எச்சரித்துள்ளது. கோவிட் சமயத்தில் பெறப்பட்ட தகவல்கள் தேசிய தகவல் மையம் மற்றும் சுகாதார அமைச்சகம் போன்ற பல அரசாங்க அமைப்புகளில் சிதறியுள்ளதால், இந்த விதிமீறல் எப்படி நடந்தது என கண்டறிவது சவாலானதாகும். இத்தகைய தரவுத் திருட்டு விதிமீறல் நடப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையின் சேவகங்களை ஹேக் செய்து 1 TB-க்கும் அதிகமான டேட்டாவை ஹேக்கர்கள் திருடினர். அதை மீண்டும் பெறுவதற்கு 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை சீனா ஹேக்கர்கள் சன்மானமாகக் கேட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இப்போது இந்திய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் முழுமையாக கசிந்துள்ளதால், இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com