சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் போலி வீடியோக்களை பார்த்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில், இதனால் நன்மைகளை விட அதிக தீமைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் இதனால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத பலவிதமான தீமைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரது முகத்தை வேறு ஒருவரது முகம் போல மாற்றம் தொழில்நுட்பத்தை DeepFake என்பார்கள். இப்போது இத்தகைய போலி காணொளிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால், எது போலி? எது உண்மை? என்பதை இந்தத் தொழில்நுட்பத்தில் நாம் கண்டுபிடிக்கவே முடியாது. எனவே இத்தகைய போலி வீடியோக்களால் நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இதுகுறித்து McAfee என்ற தொழில்நுட்பத் துறை அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், சுமார் 75 சதவீத இந்தியர்கள் போலி காணொளிகளைப் பார்த்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 38 சதவீத மக்கள் டீப் பேக் வீடியோக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும், அதில் சுமார் 18 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
டீப் பேக் காணொளிகளைப் பார்த்தவர்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அதை உண்மை என நம்புகின்றனர். குறிப்பாக டீப் ஃபேக் காணொளியால் பாதிக்கப்பட்டவர்களில் 31 சதவீதம் பேர் தங்களது பணத்தை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 39 சதவீதம் பேர் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.
அதேபோல டிப் பேக் காணொளி உருவாக்குபவர்களில் 55 சதவீதம் பேர் பிறரை ஏமாற்றி மோசடி செய்து பணம் பறிக்கவே செய்வதாகவும், அதிலும் பெரும்பாலான காணொளிகள் ஆபாச காணொளிகளாக இருப்பது தெரியவந்துள்ளது. இத தவிர ஆள்மாறாட்டம், போலி செய்திகள் பரப்ப, வரலாற்றை வேறு விதமாக மாற்றும் படியான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பரப்புகிறார்களாம்.
இப்படி விதவிதமான சைபர் குற்றங்களில் டீப் பேக் பயன்படுத்தி இந்திய மக்கள் பெரிதளவில் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற திடிகிடும் உண்மை தெரிய வந்துள்ளது. எனவே இனி அனைவருமே இணையத்தில் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எதையும் கண்மூடித்தனமாக உண்மை என நம்பி விட வேண்டாம்.