

மனித மூளைக்கு இணையாக செயல்படும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படையில், மனித மூளை செயல்பாட்டுக்கு இணையாக செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், DeepSouth என்ற பெயரில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி வருகின்றனர். அதாவது நமது மூலையில் நியூரான்களின் செயல்பாடு எப்படி இருக்கிறதோ அதேபோல இந்த சூப்பர் கம்ப்யூட்டரின் செயல்பாடு இருக்கும்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இந்த சூப்பர் கம்ப்யூட்டரால் ஒரு வினாடிக்கு 228 ட்ரில்லியன் Synaptic Operation-களை செய்ய முடியும். இது மனித மூளை ஒரு வினாடியில் செயல்படுவதற்கு மிகவும் நெருக்கமானது என சொல்லப்படுகிறது. சிட்னி யுனிவர்சிட்டியில் உள்ள ICNS ஆய்வாளர்களால் இது உருவாக்கப்படுகிறது. குறிப்பாக மனித மூளையில் உள்ள நியூரான்கள் எப்படி செயல்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்த சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.
DeepSouth சூப்பர் கம்ப்யூட்டரானது IBM TrueNorth என்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டதால் அந்த பெயர் வைக்கப்பட்டது. ஏற்கனவே சதுரங்கத்தில் உலக சாம்பியனை வென்ற Deep Blue சூப்பர் கம்ப்யூட்டரும் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது தான். இது முழுக்க முழுக்க சதுரங்கம் விளையாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர். அத்துடன் உலக சாம்பியனுக்கு எதிராக வெற்றி பெற்ற முதல் கணினியும் இதுதான்.
மனித மூளைக்கு இணையான ஒரு கம்ப்யூட்டரை மனிதர்கள் உருவாக்குகிறார்கள் என்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்றுதான். இந்த கம்ப்யூட்டர் 2024 ஆம் ஆண்டு முழுமையடைந்து, இதன் ஆற்றலை சோதித்துப் பார்க்கும் ஆர்வத்தில் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இது மட்டும் சாத்தியமானால், கம்ப்யூட்டர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.
மேலும் இது கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தப்பட்டு நம்முடைய ஸ்மார்ட்போன்களின் உட்கட்டமைப்பையும் முழுமையாக மாற்றிவிடும் வாய்ப்புள்ளது.