நீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க புதிய வினையூக்கி கண்டுபிடிப்பு.

நீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க புதிய வினையூக்கி கண்டுபிடிப்பு.
Published on

சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல், தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் புதிய குறைந்த விலை வினையூக்கியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த கேட்டலிஸ்ட் எனப்படும் வினையூக்கி பூமியில் ஏராளமாக உள்ள தனிமங்களால் ஆனது. போக்குவரத்து மற்றும் தொழில்துறைகள் உட்பட பல பயன்பாடுகளுக்கு குறைந்த விலையில் திறனுள்ள ஹைட்ரஜன் உற்பத்தியை வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஹைட்ரஜனை சரியான முறையை பயன்படுத்தி நீரிலிருந்து பிரித்தெடுக்கும்போது சுத்தமான மற்றும் அதிக ஆற்றலை வழங்குகிறது. 

எரிபொருளாக இதைப் பயன்படுத்துவதால் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைத்து காலநிலை மாற்றத்தையும் எதிர்த்துப் போராடலாம். மேலும் எஃகு தயாரிப்பு மற்றும் அமோனியா உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்துறை செயல்முறைகளில் ஹைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தூய்மையான ஹைட்ரஜனின் உற்பத்தி தேவையான ஒன்றாகவே இருக்கிறது. 

அமெரிக்க எரிசக்தி துறையின் ஆர்கான் தேசிய ஆய்வகத்தின் தலைமையில், பல நிறுவனங்களின் ஆராய்ச்சி குழுவினர் ஒன்றாக இணைந்து, நீரிலிருந்து சுத்தமான ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் குறைந்த விலை வினையூக்கியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். PEM எலக்ட்ரோலைசர் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தால் இது செயல்படுகிறது. இதைப் பயன்படுத்தி அறை வெப்பநிலையிலேயே ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகத் தண்ணீரைத் திறம்பட பிரிக்க முடியும். 

இதற்கு முன்னதாக PEM எலக்ட்ரோலைசல்களில் இருக்கும் கேத்தோட் மற்றும் ஆனோட் மின் முனைகளுக்கு, தனித்தனி வினையூக்கிகள் பயன்படுத்தப்பட்டது. கேத்தோட்டில் செயல்படும் வினையூக்கி திறமையாக ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும். அதேசமயம் இரிடியத்தால் செய்யப்பட்ட ஆனோட் வினையூக்கி, அதிக விலை மற்றும் குறைந்த அளவே கிடைப்பதால் பெரும் சவாலாக இருந்து வந்தது. எனவே குறைந்த விலையில் இரிடியத்திற்கு மாற்றாக ஆனோட் வினையூக்கியை உருவாக்குவதன் மூலம், இந்த சிக்கலை நிவர்த்தி செய்வதே விஞ்ஞானிகளின் நோக்கமாக இருந்தது. இவர்களின் தொடர் ஆராய்ச்சியில் புதிய ஆனோட் வினையூக்கியின் முக்கிய மூலப் பொருளாக கோபால்ட்-ஐப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இது விலை குறைவாகவும், அதிக அளவிலும் கிடைப்பதால் நல்ல பலனளிக்கும் என்கின்றனர். 

இந்த புதிய வினையூக்கியின் செயல்திறனைப் பரிசோதிக்க, சில நிஜ உலக தொழில்துறை இயக்க நிலைமைகளின் கீழ், PEM எலக்ட்ரோலைசர் சோதனை நிலையங்களைப் பயன்படுத்தி வினையூக்கியை சோதித்தனர். அப்போது புதிய வினையூக்கியின் செயல்திறன் மற்றும் நீடித்த தன்மை, முன்பிருந்த வினையூக்கியை மிஞ்சியதுடன், அதன் முடிவுகளும் நம்பிக்கைக்குறியதாக இருந்தன. இதன் செயல்திறனை மேலும் மேம்படுத்த விஞ்ஞானக் குழுவினர் இன்னும் பல அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளனர். 

இதனால் அடுத்த பத்து ஆண்டுகளில் பச்சை ஹைட்ரஜன் உற்பத்தியின் விலையை ஒரு கிலோவிற்கு ஒரு டாலராக கணிசமாகக் குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com