

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. உலகமே வியக்கும் வண்ணம் பல கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் தமிழகம் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் பொறியியல் துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் அறிவியல் பரவல் மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. IIT Madras போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன. மேலும் பல விண்வெளி ஸ்டார்ட் அப்களும் மாநிலத்தில் உருவாகி வருகின்றது. இது தொழில்நுட்ப வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
விண்வெளி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்புகள்:
திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரியில் ISROவின் உந்துவிசை வளாகம்(IRPC) உள்ளது. இது கிரையோஜெனிக் இன்ஜின்கள் மற்றும் ராக்கெட் நிலைகளை சோதிக்கிறது.
தூத்துக்குடிக்கு அருகில் நாட்டின் இரண்டாவது விண்வெளித் தளம் அமைக்கப்படுகிறது. இது செயற்கைக்கோள் ஏவுதல்களை எளிதாக்கும்.
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், துல்லியமான பொறியியல், ஏவியோனிக்ஸ் போன்ற துறைகளில் பங்களிக்கின்றன.
மயில்சாமி அண்ணாதுரை-சந்திராயன் 1 திட்ட இயக்குனர், கே.சிவன்-இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மற்றும் சந்திராயன் 2 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர், பி.வீரமுத்துவேல்-சந்திராயன் 3 திட்ட இயக்குனர் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISROவின் பல முக்கிய சாதனைகளின் பின்னால் தமிழர்கள் உள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் மின்னணுவியலில் முக்கிய பங்களிப்புகள்:
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலமாக உள்ளது. பல e-அரசுத் திட்டங்களை செயல்படுத்துகிறது.
சென்னை, கோயம்புத்தூரில் பல மின்னணுவியல் மற்றும் பொறியியல் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
சென்னை இந்தியாவின் 'SaaS Capital' (Software as a Service) என்று அழைக்கப்படுகிறது. ஜோஹோ(Zoho) மற்றும் ஃப்ரெஷ்வொர்க்ஸ்(Freshworks) போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து உருவானவை.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர்.
ஆராய்ச்சி மற்றும் கல்வியில் முக்கிய பங்களிப்புகள்:
IIT Madras, NIT திருச்சி போன்ற நிறுவனங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்(TNSTC) அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
'ராமன் விளைவுக்காக' இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன், இந்தியாவின் 'ஏவுகணை மனிதர்' என அழைக்கப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற எஸ்.சந்திரசேகர், வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்ற உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகளை தமிழகம் உருவாக்கியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கொள்கைகள்:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பப் பேரவை(TNSCST) அறிவியல் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.
விண்வெளித் துறைக்கான புதிய கொள்கையை தமிழ்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்டார்ட் அப்களுக்கு உதவுகிறது.
தமிழ்நாடு ஒரு வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டின் விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்துக் கொண்டு வருகிறது.
மருத்துவம் மற்றும் உயிரி தொழில்நுட்பம்:
மருத்துவ சிகிச்சையில் சென்னை இந்தியாவின் 'மருத்துவத் தலைநகரம்'(Medical Capital) என்று அழைக்கப்படுகிறது. அங்க மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல்:
சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது. அதிநவீன தானியங்கி வாகன உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது.