
இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க , இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்க்க இந்தியா, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று இந்தியா பெயரிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த இலக்குகள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 100 கி.மீ.க்குள் இருந்தன. தாக்குதலுக்கு முன்னர், 12 பயங்கரவாத மறைவிடங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, பின்னர் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் இருந்து தான் பஹல்காம் தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் வழிகாட்டி வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க் கிழமை பின்னிரவில் இந்திய விமானப்படை ரஃபேலில் இருந்து ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணைகளை ஏவியது. இந்த ஏவுகணைகள் குறுகிய தூர தாக்குதல்களுக்கு பெயர் பெற்றவை.
ஐரோப்பிய நிறுவனமான MBDA ஸ்கால்ப் ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழிவை ஏற்படுத்துவதற்கு சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த ஏவுகணை 90களின் பிற்பகுதியில் இங்கிலாந்து ராயல் விமானப்படை மற்றும் பிரெஞ்சு விமானப்படைக்காக உருவாக்கப்பட்டது.
துல்லியமாக இலக்கை அடைய இதில் ஜிபிஎஸ் மற்றும் அதற்குக் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது சிறப்பான வழிகாட்டி உதவியுடன் துல்லியமாக இலக்கை தாக்கி பேரழிவை ஏற்படுத்தும். மோசமான வானிலையில் கூட அதன் துல்லியம் தப்பாது. அந்த அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்தது இந்த ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணை.
ஸ்கால்ப் ஏவுகணை 560 கிமீ தூரம் வரை குறி வைத்து தாக்கும் திறன் பெற்றது . இதன் சிறப்பு என்னவென்றால், பல வகை போர் விமானங்களில் இருந்து இதை ஏவ முடியும். மிராஜ் 2000, யூரோஃபைட்டர் டைபூன், டொர்னாடோ ஜிஆர்4 மற்றும் ரஃபேல் விமானங்களில் கூட இதை பயன்படுத்த முடியும். தற்போது இந்திய விமானப்படை ரபேல் போர் விமானத்தை பயன்படுத்தி ஸ்கால்ப் ஏவுகணையை ஏவியுள்ளது.
ஸ்கால்ப் ஏவுகணையை உருவாக்கிய நிறுவனமான MBDA இன் கூற்றுப்படி, அதில் நிறுவப்பட்ட அகச்சிவப்பு கேமரா, அதன் இலக்கின் படங்களுடன் ஏற்கனவே உள்ள படங்களுடன் பொருத்துகிறது. இரண்டு படங்களையும் பொருத்திய பிறகு, அது பதுங்கியிருந்து இலக்கைத் தாக்குகிறது. இதுவே இந்த ஏவுகணை அதன் இலக்கிலிருந்து துல்லியமாக தாக்குவதற்கு காரணம்.
இதற்கு முன் ஸ்கால்ப் ஏவுகணை ரஷ்யா- உக்ரைன் போரில், பல முறை உக்ரைனால் பயன்படுத்தப்பட்டது. 1300 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை ஈராக், லிபியா மற்றும் சிரியா போர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், ஹேம்மர் என்கிற துல்லியமாக வழிகாட்டுதலுடன் சென்று தாக்கும் வெடிகுண்டும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது ஏவுதல் உயரத்தைப் பொறுத்து 50-70 கிமீ வரம்பில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் வெடிகுண்டாகும். இது மோசமான வானிலையிலும் வானத்திலிருந்து தரைக்கு துல்லியமாக வழி நடத்தப்படும் வெடிகுண்டு ஆகும். இந்த வெடி குண்டை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சஃப்ரான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வெடிகுண்டை இடைமறிப்பது கடினம். பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பை தாண்டி ஊடுருவி தாக்கும் வல்லமை பெற்றது.