கெட்டவையும் கடத்தலும், தீயவையும்,திருட்டும் நடக்கும் 'இருள் மூலை' எங்கே இருக்கிறது தெரியுமா?

Surface Web, Deep Web, Dark Web
Surface Web, Deep Web, Dark Web

நாம் ஒரு குறிப்பிட்ட தகவலைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம், இணையத்துக்குச் சென்று நம்முடைய கேள்வியைத் தட்டித் தேடுகிறோம், அங்கு தோன்றும் பக்கங்களைப் படித்து, வேண்டிய தகவலைப் பெற்றுக்கொள்கிறோம். நம்மைப் பொறுத்தவரை இதுதான் 'இணையம்'.

ஆனால் உண்மையில், இது ஒரு மிகப் பெரிய பனிப்பாறையின் நுனிமட்டும்தான். படகில் அமர்ந்திருக்கிற நாம் அந்த நுனியைமட்டும் பார்த்து இணையத்தைப் புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்கிறோம். நீர்மூழ்கும் உடைகளை அணிந்துகொண்டு தண்ணீருக்குள் குதித்தால்தான் அந்தப் பாறை எவ்வளவு பெரியது, எவ்வளவு ஆழமாகச் செல்கிறது எத்தனை அமானுஷ்யமானது என்பதெல்லாம் நமக்குப் புரியும்.

அதாவது, நாம் எல்லாரும் பயன்படுத்துகிற, எளிதில் தேடிக் கண்டறியக்கூடிய இணையமும் அதில் உள்ள பக்கங்கள், தகவல்கள், கோப்புகள் அனைத்தும் Surface Web அல்லது Open Web என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இது வெறும் மேற்பரப்புதான். அதன் ஆழத்தில் இன்னும் நிறையப் பக்கங்கள் இருக்கின்றன. அவற்றை Deep Web என்கிறார்கள்.

டுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு செய்தித்தாளின் பெயரைத் தட்டித் தேடுகிறீர்கள். அங்கு சென்று செய்திகளைப் படித்து மகிழ்கிறீர்கள். இது Surface Web.

அதே நேரத்தில், அந்தச் செய்தித்தாள் அலுவலகத்தில் நாளைய செய்திகளைத் தட்டச்சு செய்துகொண்டிருப்பார்கள், அதற்கான படங்களை, ஓவியங்களைச் சேர்த்து வடிவமைத்துக்கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் நீங்களோ நானோ பார்க்கமுடியாது. நாம் வலியச் சென்று தேடினாலும் இந்தப் பக்கங்கள் கிடைக்காது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்த சில பணியாளர்கள்மட்டும்தான் அதைப் பார்க்கமுடியும். இது Deep Web.

அடிப்படையில் Surface Web, Deep Web இரண்டும் ஒரே வடிவமைப்பைத்தான் கொண்டிருக்கின்றன. முதலாவதை எல்லாரும் பார்க்கலாம், இரண்டாவதைச் சிலர்தான் பார்க்கமுடியும் என்பதுதான் இவற்றை வேறுபடுத்துகிறது. எண்ணிக்கை அளவில் பார்த்தால் எல்லாரும் பார்க்கக்கூடிய இணையம் வெறும் 5%தான் என்கிறார்கள். அதோடு ஒப்பிடும்போது, தனிப்பட்ட பயன்பாடுகளுக்கான, சிலர்மட்டும் பார்க்கக்கூடிய இணையம் இன்னும் பலமடங்கு ஆழமாகச் செல்கிறது.

சிலர் Deep Webஐக் கெட்ட இணையத் தளங்கள் என்று நினைக்கிறார்கள். அது தவறு. அவையும் நல்ல இணையத் தளங்கள்தான். சொல்லப்போனால் உலகெங்கும் உள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்தும் Deep Webல் தங்களுடைய தகவல்கள், கோப்புகள், தரவுத்தளங்களைச் சேமித்துவைத்துள்ளன, அவர்களுடைய பணியாளர்கள் நிமிடத்துக்கு நிமிடம் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள், கூடுதல் தரவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். Surface Web தகவல்களை அள்ளித் தருகிறது என்றால், Deep Web இன்னும் ஆழமாக, இன்னும் விரிவாக, இன்னும் செயல்திறனுடன் உலகை இயக்குகிறது.

இதையும் படியுங்கள்:
அறிவியல் ஆச்சரியம்! உலகின் முதல் இயற்கை அணுஉலை!
Surface Web, Deep Web, Dark Web

னால், அந்த Deep Webக்குள் Dark Web என்று அழைக்கப்படுகிற ஓர் இருள் மூலை இருக்கிறது. அங்குள்ள பக்கங்களைப் பார்ப்பதற்குச் சிறப்பு இணைய உலாவி (Internet Browser) தேவைப்படும், அங்கு நுழைவதற்குப் பல தடைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டவேண்டியிருக்கும். இங்குதான் பல கெட்ட வேலைகள் நடக்கின்றன.

ஏனெனில், Dark Webக்குள் நீங்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது. Anonymity எனப்படும் பெயரிலா நிலையைப் பயன்படுத்திக்கொண்டு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், புத்தகங்கள் போன்றவற்றின் திருட்டுப் பிரதிகளைப் பகிர்ந்துகொள்வது, அரசாங்கத்துக்குத் தெரியாமல் பணத்தைப் பரிமாறுவது, பொருட்களைக் கடத்துவது, தீய மென்பொருட்களைக் கணினியில் இறக்கி அவற்றைக் கட்டுப்படுத்துவது, தகவல்கள் அல்லது பணத்தைத் திருடுவது, இப்படி...

ல்லவேளையாக, நம்மில் பெரும்பாலானோர் எப்போதும் Dark Webக்குள் நுழையப்போவதில்லை. அங்கு நடப்பவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது, நம்மைப் போன்ற பொதுமக்கள் அதன்மூலம் பாதிக்கப்படாதபடி எப்படித் தடுப்பது என்று உலகெங்குமுள்ள சட்ட வல்லுனர்கள், தொழில்நுட்பத் திறனாளர்கள், காவல்துறையினர் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள், பலவற்றை முயன்றுகொண்டிருக்கிறார்கள். அதனால், இந்தச் சிக்கலை அவர்கள் கையில் விட்டுவிட்டு, நாம் Surface Webல் இருக்கிற ஏமாற்றுகள், தில்லுமுல்லுகளிலிருந்து முதலில் நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com