இப்போதெல்லாம் பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவது அதிகரித்துவிட்டது. ஆனால் அந்த செயலிகளில் ஒரு நாளைக்கு எவ்வளவு பரிவர்த்தனை செய்யலாம் என்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் அதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை உள்நாட்டு டிஜிட்டல் பேமென்ட் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே யுபிஐ பரிவர்த்தனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பணம் செலுத்துதல் தொடர்பாக வங்கிகளுக்கு இது சாதகமாக உள்ளதால், எல்லா வங்கிகளும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகின்றனர்.
பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற யுபிஐ தளங்கள் பயனர்கள் எளிதாக பணம் செலுத்துவதற்கு வசதியாக இருப்பதால், இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது எனலாம். ஆனால் இந்த பணப்பரிவர்த்தனையில் தினசரி வரம்பு உள்ளது என்பது பலருக்குத் தெரிவதில்லை.
அமேசான் பே செயலி மூலமாக ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 லட்சம் வரை பணம் அனுப்ப முடியும். குறிப்பாக இதில் தினசரி 20 பரிவர்த்தனங்களை மட்டுமே செய்ய முடியும். புதிய பயனர்கள் முதல் 24 மணி நேரத்தில் அதிகபட்சம் 5,000 ரூபாய் மட்டுமே அனுப்ப அமேசான் பே செயலி அனுமதிக்கிறது.
கூகுள் பே செயலியிலும் ஒரு நாளைக்கு அதிகபட்ச பணம் அனுப்பும் வரம்பு 1 லட்சம்தான். அதற்கு மேல் பணம் செலுத்த முடியாது. ஆனால் இதில் ஒரு நாளைக்கு பத்து பரிவர்த்தனைதான் செய்ய முடியும்.
கூகுள் பே போலவே போன்பே-விலும் 1 லட்சம் மட்டுமே செலுத்த முடியும். இதிலும் ஒரு நாளைக்கு பத்து பரிவர்த்தனைக்கு மேல் அனுமதி இல்லை.
பேடிஎம் செயலியிலும் இதே நிலைதான். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1 லட்ச ரூபாய் மட்டுமே அனுப்பும்படி உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட பரிவர்த்தனைகள்தான் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணப்பரிவர்தனை செய்யலாம். ஆனால் மொத்த பரிவர்த்தனையின் தொகை ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.