Twitter-ஐ காலி செய்ய வந்திருக்கும் Threads செயலியின் அம்சங்கள் என்ன தெரியுமா?

Twitter-ஐ காலி செய்ய வந்திருக்கும் Threads செயலியின் அம்சங்கள் என்ன தெரியுமா?

திரைப்படங்களில் வில்லனுக்கு எதிராக ஹீரோ சபதம் போட்டு, ஒரு வேலையை செய்து காட்டுவது போல, மார்க் ஜுகர்பெர்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக ஒரு செயலியை உருவாக்கிக் காட்டுகிறேன் என்று கூறி, அதை செய்தும் காட்டியுள்ளார். 

ட்விட்டர் தளத்தை விழ்த்தும் நோக்கில் இந்தியா உள்பட உலகளவில், மெட்டா நிறுவனத்தின் Threads செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுகமான வேகத்தில், எக்கச்சக்கமான பயனர்கள் இந்த செயலியை அறக்கப் பறக்க டவுன்லோட் செய்து வருகின்றனர். மார்க் ஜுகர்பெர்கின் கூற்றுப்படி, இந்த செயலி அறிமுகமான வெறும் இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் சைன் அப்களைக் கடந்துவிட்டது. அதாவது 20 லட்சம் பயனர்கள் திரெட் செயலியை தங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதேபோல வெளியான ஏழு மணி நேரத்தில் 1 கோடி பயனர்கள் இதில் இணைந்துள்ளனர். 

இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டிற்குமே அணுகக்கூடிய வகையில் கிடைக்கிறது. மார்க் ஜுகர்பெர்க் சொல்வதுபோல, இது ட்விட்டர் தளத்தை விட சிறப்பாக செயல்படுமா என்பதற்கான பதிலை அறிந்துகொள்ள, அதைப் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். எனவே புதிய செயலி எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே பலரும் இதை டவுன்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

இந்த செயலியை நீங்கள் டவுன்லோட் செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐபோன் பயனராக இருந்தால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். Threads, an Instagram App என்கிற பெயரில் இது வெளிவந்துள்ளது. பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் instagram கணக்கைப் பயன்படுத்தி உள்ளே எளிமையாக Login செய்யலாம். 

இந்த செயலியின் பயன் என்னவென்று பார்க்கும்போது, சிறிய செய்திகளை பிறருக்கு பகிர, ட்விட்டர் தளத்தைப் போலவே இந்த செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 500 வார்த்தைகள் உள்ளடங்கிய போஸ்ட்களை மட்டுமே ஒருவரால் பதிவு செய்ய முடியும். இதில் லிங்குகள், அதிகபட்சமாக 10 புகைப்படங்கள் மற்றும் 5 நிமிட நீளம் கொண்ட காணொளிகள் வரை சேர்த்து பகிர முடியும். மேலும் உங்களுடைய பதிவுக்கு யார் பதிலளிக்கலாம் என்பதையும் நீங்களே கட்டுப்படுத்தலாம். ட்விட்டரில் இருக்கும் எல்லா அம்சங்களும் இந்த செயலியிலும் இருக்கிறது. 

நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பயன்படுத்திக் கொண்டிருந்தால், இந்த செயலி பயன்படுத்துவது உங்களுக்கு எளிதாக இருக்கும். இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த நபர்களின் அக்கவுண்ட் தானாகவே த்ரெட் செயலியிலும் பிளாக் செய்யப்படும். இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடைகிறது என்பதைத் தெரிந்துகொள்ள கொஞ்ச காலம் நாம் காத்திருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com