
வானியல் உலகில் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவது பொதுமக்கள் அனைவராலும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்தால், அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்தால் அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற வானியல் நிகழ்வுகளை தொலைநோக்கியில் கண்டுகளிக்கலாம். இதே போன்ற ஓர் அரிய வானியல் நிகழ்வு தான் பிளானட்டரி பரேட். இந்த நிகழ்வில் என்னென்ன சுவாரஸ்யங்கள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
வானியல் நிகழ்வுகள் அனைத்தும் விசித்திரமானவை. ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தும் வானியல் நிகழ்வுகளைக் காண பொதுமக்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை தொலைநோக்கியின் வாயிலாக பார்க்க, அறிவியல் தொழில்நுட்ப மையங்களுக்கு மக்கள் செல்வது அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் வானியல் அறிஞர்களின் பரிந்துரைப்படி, கிரகணங்களை வெறும் கண்களால் கூட பார்க்கலாம்.
சூரியனின் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவதை வானியல் அறிஞர்கள் பிளானட்டரி பரேட் என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வும் எப்போதாவது நிகழ்வது தான். இந்நிகழ்வை இரவில் குறிப்பிட்ட நேரத்தில் வெட்ட வெளியில் இருந்தோ அல்லது மொட்டை மாடியில் இருந்தோ கண்டுகளிக்கலாம். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்தன. இந்நிலையில் இந்த நிகழ்வு நடப்பாண்டில் மட்டும் 3 முறை நிகழப் போகிறது என சமீபத்தில் வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.
ஒரு காலத்தில் வானியல் அரிய நிகழ்வுகள் எப்போது நிகழும் என்றே தெரியாமல் இருந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் எப்போது நிகழும் என்பதை எளிதாக கண்டறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்படி நடப்பாண்டில் ஜனவரி 22 முதல் 25 வரையிலான நான்கு நாட்களில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. இந்த அரிய நிகழ்வை மாலை 6 முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் வெறும் கண்களால் காணலாம். இதில் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 2 கோள்களை தொலைநோக்கியில் மட்டுமே காண முடியும்.
6 கோள்களும் கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கிய பாதையில் தென்படும். இதில் வெள்ளி கோள் மட்டும் அதிக பிரகாசத்துடன் காட்சியளிக்கும். செவ்வாய் கோள் செம்பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். அளவில் சற்றுப் பெரியதாக இருக்கும் இந்த கோள்கள், நட்சத்திரங்களைப் போல் மின்னாது. இந்தக் காட்சியினை பொதுமக்களும், மாணவர்களும் கண்டுகளிக்க சென்னை, கோவை, வேலூர், மற்றும் திருச்சியில் உள்ள தொழில்நுட்ப அறிவியல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அடுத்ததாக வருகின்ற பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவுள்ளன. பிறகு ஆகஸ்ட் மாதத்திலும் பிளானட்டரி பரேட் நிகழ்வு ஏற்படும் என 'பிளானட்டரி பரேட்' அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 3 முறை நிகழவிருக்கும் பிளானட்டரி பரேட், அதற்கு அடுத்தபடியாக 15 ஆண்டுகள் கழித்து 2040 இல் தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.