சமீபத்தில் பெரு மழை வந்து நம்மை அலைக்கழித்துச் சென்றது. தவறாமல் வானிலை பற்றிய தகவல்களை அறிவதில் அனைவரும் ஆர்வமுடன் இருந்தோம். நம் வாழ்வில் இரண்டறக் கலந்த இயற்கை விதிகளில் ஒன்றான வானிலை பற்றிய ஆய்வுகள் இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணமான வானியல் ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர்.மேகநாத் சாஹா.
இந்தியாவில் வானிலை ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டாக்டர்.மேகநாத் சாஹா. சிறந்த வானியற்பியல் மற்றும் வானிலை ஆய்வாளரான இவர் பூமியின் வளிமண்டலம் மற்றும் வானிலை முறைகள் பற்றிய ஆய்வுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.
மேகநாத சாஃகா (Megh Nad Saha,) வங்காளத்தில் உள்ள சியோரடலி எனும் ஊரில் அக்டோபர் 6 ந்தேதி1893 ஆம் ஆண்டு மளிகை வியாபாரியின் 5வது மகனாகப் பிறந்தவர். குடும்ப பொருளாதாரம் காரணமாகச் சிறு வயதிலேயே இவரை வேலைக்கு அனுப்ப நினைத்தார் அவர் தந்தை. சாஃகாவின் பள்ளி ஆசிரியர்கள் அவரைத் தடுத்து சாஃகாவை பள்ளியில் தொடரச் செய்ததின் விளைவாக இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த புகழ்பெற்ற இயற்பியலாளராக உருவாகினார்.
இயற்பியலாளர் என்றாலும் சாஃகா தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறு வயது முதல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1905 ஆம் ஆண்டு வங்கத்தைக் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்த ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோது சாகாவுக்கு வயது பன்னிரண்டு. தன்னால் போராட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லையே என்று வருந்தினார் சாஃகா. வங்கத்தின் ஆளுநர் பள்ளிக்கு வந்த அன்று தன் நண்பர்களை அழைத்துப்பேசி, வகுப்புகளைப் புறக்கணித்தார் சாகா. சிறு வயதிலேயே அச்சமின்றி நாட்டின் மீது அக்கறையுடன் இருந்ததற்கான சான்று இந்நிகழ்வு.
பள்ளி இறுதித்தேர்வில் முதல் மாணவராகத் திகழ்ந்த இவர் உதவித்தொகை மூலம் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்திலேயே இரண்டாவதாக வந்த சாஃகா இந்திய நிதிப்பணியில் சேர்ந்து வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தைக் கரையேற்ற நினைத்தார். ஆனால் அவர் பள்ளியில் செய்த வகுப்புப் புறக்கணிப்பு, விடுதலை வீரர்களுடனான தொடர்பு போன்ற காரணங்களால் அவருக்கு I.F.S. வேலை நிராகரிக்கப்பட்டது.
அதுவே இயற்பியல் தந்தையாக மாறுவதற்கு வழிவகுத்தது.ஆம், அவரது முதல் காதலான இயற்பியலின் பக்கம் சாஃகாவின் நாட்டம் சென்றது. அதன் பின்னர் இவரின் கடும் ஆராய்ச்சியின் விளைவாகத் தோன்றியதே அயினியாக்கச் சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாடு. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.
சாஃகா தன் கடுமையான முயற்சியால் உருவாக்கிய இந்த சமன்பாடு சூரியன், விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை, அழுத்தம் போன்ற புறநிலை இயல்புகளை அறியவும் உதவுகிறது. இதை உருவாக்கிய போது சாகாவுக்கு வயது என்ன தெரியுமா 25 தான். இந்த அயினியாக்கச் சமன்பாடு சூரியனில் அதிகளவில் ஹைட்ரஜன் வாயுவே உள்ளது எனும் முக்கிய மாற்று முடிவுக்கு வழிவகுத்தது.
இவர் மேற்கொண்ட வெற்றிகரமான பல ஆய்வுகளில் ஒன்றாக இந்திய நாள்காட்டி முறையான சக ஆண்டு (saka era) முறையைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்தியது சிறப்பு. 1948 இல் அவர் கொல்கத்தாவில் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம் (Saha Institute of Nuclear Physics) என்று பெயர் மாற்றப்பட்டு மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையமாக விளங்குகிறது.
அவர் தருவித்த அயனியாக்க சமன்பாட்டைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பிரிட்டிஷ் ராயால் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது பெயர் நோபல் பரிசுக்கு (1935 - 36) பரிந்துரைக்கப்பட்டது சிறப்பு.தனது 62 வயதில் 1956ல் இவர் மறைந்தாலும் வானம் உள்ளவரை இவர் வகுத்த கோட்பாடுகள் இவருக்குப் பேரும் சேர்க்கும்.. கூடவே இந்தியர்களான நமக்கும்.
தொகுப்பு: சேலம் சுபா