ஃபேஸ்புக் தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான புதிய செயலிகள் வெளியே வந்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும், ஃபேஸ்புக்கை ஏன் இன்றளவும் மற்ற செயலிகளால் வீழ்த்த முடியவில்லை என்று நீங்கள் சிந்தித்துண்டா?
உலகிலேயே பெரும் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையே பல போட்டி இருந்து வந்தாலும், ஃபேஸ்புக் செயலியானது சமூக வலைதள உலகில் தொடர்ந்து முன்னோடியாக இருந்து வருகிறது. பொதுமக்கள் ஒரு முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள ஆரம்ப காலத்தில் பத்திரிகையைப் பயன்படுத்தினர். பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தகவல் பரிமாற்றம் தொலைக்காட்சி, ரேடியோ என விரிவடைந்து, இறுதியில் அதன் உச்சகட்டமாக சமூக வலைதளங்களை தற்போது உருவாக்கி இருக்கிறது.
உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும், இன்டர்நெட் கிடைக்கும் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்துகொண்டு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அதை அறிய முடியும். இத்தகைய ஆற்றல் கொண்ட சமூக வலைதளங்களில் புதுப்புது அம்சங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டாலும் தனக்கான முதலிடத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளது ஃபேஸ்புக்.
பொதுவாகவே ஒரு பொருளை நீண்ட நாட்கள் பயன்படுத்தினாலும், புதிதாக ஒரு பொருள் அறிமுகமானதும் பழைய பொருளை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், ஒரு சில பொருட்கள் மட்டுமே அதற்கு விதிவிலக்காக இருக்கும். எந்த ஒரு சூழலிலும் நம்மை விட்டு பிரியாதபடி அதைப் பார்த்துக்கொண்டிருப்போம். அப்படிதான் சமூக வலைத்தளத்துறையில் எத்தனையோ சிறப்புகள் மிக்க செயலிகள் வந்தாலும், இன்றும் பயனர் எண்ணிக்கையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ஃபேஸ்புக் தான்.
இந்த facebook கடந்த 2004 ஆம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவனால், தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும். தொடக்கத்தில் புகைப்படங்களை பகிர்வது, மெசேஜ் அனுப்புவதற்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்புக், தற்போது பல புதிய அம்சங்களுடன் பயனர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. உலக அளவில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாகவும் ஃபேஸ்புக் இருக்கிறது.
இப்போது இருக்கும் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களோடு ஒப்பிடுகையில், ஃபேஸ்புக் செயலிக்கு 300 கோடி மாதாந்திரப் பயணங்கள் இருக்கின்றனர். அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் ஒவ்வொரு மாதமும் இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும், 20 கோடி பயனர்கள் வர்த்தக நோக்கத்திற்காக facebook செயலியை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சுமார் 70 லட்சம் விளம்பரங்கள் மாதத்திற்கு ஒளிபரப்பப்படுகிறது.
பல போட்டி நிறுவனங்களுக்கு மத்தியிலும் ஃபேஸ்புக் பிரபலமாக இருப்பதற்கு, அது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் இருப்பதே காரணமாகும். உங்கள் ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். விளம்பர ரீதியாகவும், வணிக ரீதியாகவும், பயன்பாட்டு ரீதியாகவும் எல்லா வகை மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஃபேஸ்புக் இருப்பதால் அது தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது எனலாம்.
இதனால்தான், எவ்வளவோ செயலிகள் அறிமுகமானாலும் ஃபேஸ்புக் எப்பொழுதுமே ஒரு அல்டிமேட் நிலையில் தொடர்ந்து இருக்கிறது.