Whatsapp வழியாக அடிக்கடி பணப்பரிமாற்றம் செய்பவர்கள் அனைவரும் இந்த பதிவில் சொல்ல போகும் இரண்டு மிக முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தினசரி உலகெங்கிலும் பல கோடி மக்கள் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். காலை எழுந்த உடனேயே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் முகத்தில் தான் பெரும்பாலானவர்கள் கண் விழிக்கிறார்கள். ஒரு காலத்தில் மெசேஜ்கள் மட்டுமே பரிமாறிக் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த Whatsapp, அதன் பிறகு வீடியோக்கள் புகைப்படங்கள், டாக்குமென்ட்கள் என அனைத்தையும் பரிமாறுவதற்கு ஏதுவாக இருந்து வந்தது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு முதல் பணம் அனுப்பும் வசதியும் கொண்டுவரப்பட்டது.
மற்ற பணம் அனுப்பும் போன் பே, கூகுள் பே, பேடிஎம் செயலிகள் போலவே, whatsapp வழியாக பணம் அனுப்புவதும் மிகவும் பாதுகாப்பான ஒன்றுதான். ஏனென்றால், இது UPI எனப்படும் யூனிஃபைடு பேமென்ட் இன்டர்பேஸ் முறையில் செயல்படுவதே முக்கியக் காரணமாகும்.
என்னதான் பணப் பரிமாற்றத்திற்கு இது மிகவும் பாதுகாப்பானது என்றாலும், வாட்ஸ்அப் வழியாக நடக்கும் பணப் பரிமாற்றம் குறித்த ஹிஸ்டரியை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதோடு வாட்ஸ் அப்பில் நம்முடைய வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Whatsapp வழியாக பேமெண்ட் ஹிஸ்டரி மற்றும் பேங்க் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
உங்கள் வாட்ஸ் அப் செயலியைத் திறந்து, வலதுபுறத்தின் மேலே உள்ள 3 டாட் மெனுவைக் கிளிக் செய்யவும். அந்த மெனுவில் பேமெண்ட் என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் ஹிஸ்டரி என்பதை கிளிக் செய்தால் உங்கள் பரிவர்த்தனைகள் சார்ந்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் ஐ போன் பயனராக இருந்தால், வாட்ஸ் அப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றால், பரிவர்த்தனை வரலாற்றை அறியலாம்.
பேங்க் பேலன்ஸ் செக் செய்வதற்கு, வாட்ஸ் அப்பைத் திறந்து More என்பதைக் கிளிக் செய்யவும். அதில் Payment பகுதியில், Payment Methods என்பதைக் கிளிக் செய்து, உங்களுடைய அக்கவுண்ட்டைக் கிளிக் செய்தால், View Account Balance மூலமாக உங்கள் கணக்கில் மீதமுள்ள தொகையைத் தெரிந்து கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பில் இந்த இரண்டு விவரங்களையும் நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இணையம் வழியாக பல்வேறு விதமான திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. நமக்கே தெரியாமல் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்ய பல வழிமுறைகளைத் திருடர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.
எனவே அவ்வப்போது பணப்பரிமாற்றம் சார்ந்த வரலாறு மற்றும் வங்கியில் இருக்கும் மீதத்தொகையை சரி பார்த்துக் கொள்வது, நம் பாதுகாப்பை மேலும் உறுதி செய்கிறது. வாட்ஸ் அப் செயலியில் மட்டுமின்றி, மற்ற பணப் பரிவர்த்தனை தளங்களிலும் இதையே பின்பற்றுவது நல்லது.