
மனித மூளையின் மர்மங்கள் இன்னும் முழுமையாக விலகாத புதிர்களாகவே இருக்கின்றன. விஞ்ஞானிகள் மூளையின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள். நினைவுத்திறன், உணர்ச்சிகள், சிந்தனை ஆற்றல், கனவுகள் எனப் பல விஷயங்கள் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றன. கம்ப்யூட்டரை விட பல மடங்கு சிக்கலான இந்த உறுப்பு, மரணத்திற்குப் பின்னும் செயலில் இருக்குமா என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் ஒரு கேள்வி.
சமீபத்திய ஆய்வுகள் இந்த விவாதத்திற்கு புதிய திருப்பம் அளித்துள்ளன. மரணம் நெருங்கும் வேளையில் மூளையில் ஏற்படும் மின் செயல்பாடுகள் குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, மரணப்படுக்கையில் இருந்த சில நோயாளிகளின் மூளை அலைகளை ஆய்வு செய்தனர். இதயத் துடிப்பு நின்று, உடல் செயலிழந்த பின்னரும் கூட, மூளையில் சில குறிப்பிட்ட வகையான மின் அலைகளின் செயல்பாடு அதிகரித்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
குறிப்பாக, காமா அலைகள் (Gamma Waves) எனப்படும் அதிவேக மூளை அலைகள், மரணத்திற்கு சற்று முன்பு உச்சத்தை தொட்டுள்ளன. இது மூளை மரணத்தை உணர்ந்து அதற்கு தயாராகிறதா அல்லது மரணத்தின் தருணத்தில் ஏதேனும் விழிப்புணர்வு ஏற்படுகிறதா போன்ற கேள்விகளை எழுப்புகிறது. பேராசிரியர் ஹேம்ரோஃப் போன்ற விஞ்ஞானிகள் இது மரணத்தின் போது உயிர் உடலை விட்டு பிரியும் தருணத்தை மூளை உணர்த்துவதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்புகள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் மனித உணர்வு குறித்த புரிதலுக்கு உதவலாம். உயிர் பிரிகிறதா அல்லது மூளையின் இறுதிக்கட்ட நடவடிக்கையா என்பது இன்னும் முழுமையாக புரியவில்லை. எனினும், இந்த ஆய்வுகள் மரணம் பற்றிய நமது புரிதலில் ஒரு புதிய வழியை திறந்துள்ளன. மூளையின் மர்மங்களை ஆராய்ந்து இன்னும் ஆச்சரியமான உண்மைகளை கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.