நீங்கள் காணும் கனவுகளை ஒரு திரைப்படம் போல பதிவு செய்து உங்களுக்கு காட்டினால் எப்படி உணர்வீர்கள்? ஆம், அப்படிப்பட்ட கனவுகளை பதிவு செய்யும் சாதனத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கனவுகளின் உலகம் ஒரு மர்மமான உலகம். நமது ஆழ்மனதின் ஓட்டங்களை மையமாக வைத்து உருவாகும் கனவுகள் மனிதர்களை வியக்க வைக்கிறது. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின்போது வரும் கனவுகளை ஒரு காணொளியாகப் பதிவு செய்து உங்களால் பார்க்க முடிந்தால் என்ன செய்வீர்கள்? ஜப்பானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கனவை பதிவு செய்யும் சாதனம் கனவுகளின் மிகவும் புதிரான விஷயங்களை ஆராய்வதற்கான முன்னோடியாக விளங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் நியூரோ இமேஜிங் ஆகியவற்றின் உதவியால் இந்த தொழில்நுட்பம் கனவு நிலைகளின்போது ஏற்படும் நரம்பியல் செயல்பாட்டைப் படம் பிடிக்கும். மேலும், அது நாம் புரிந்துகொள்ளும்படியாக காணொளி போல மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதிநவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி மூளையுடன் இமேஜின் நுட்பங்களை ஒருங்கிணைப்பது மூலமாக, கனவுகளின் காட்சிகளை டீகோடிங் செய்வதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதுதான் கனவுகளை வீடியோவாக மாற்றும் சாதனத்தை உருவாக்க வழி வகுத்தது.
இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களின் புதுமையான யோசனைகளை உருவாக்குவதற்கும், மனிதர்களின் கனவு நிலையின் எல்லைகளை அறிவதற்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகச் செயல்படும் எனக் கூறியுள்ளனர். இந்த சாதனம் நம் கனவுகள் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனின் பல்வேறு விதமான மர்மங்கள் வெளிவரும். மேலும், எப்போதும் இல்லாத அளவுக்கு நமது கனவுகளின் உள்ளார்ந்த அறிவை ஆராய்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.