இதயத்துடிப்பை கண்காணிக்கும் இயர்பட்ஸ்!
ஹெட் செட் வழியாக இதைத்துடிப்பை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம் குறித்த ஆய்வை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது.
சமீபத்தில் Audio Plethysmography என்ற தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி தகவல்களை கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன்கள், இயர்பட்கள் பயன்படுத்தி இதயத்துடிப்பை கண்காணிக்க முடியும் என கூகுள் நிறுவனம் கூறுகிறது. நம்முடைய ஆரோக்கியத்தை கண்காணிப்பதில் செவிக்குழாயும் முக்கிய பங்கு வகிக்கிறது என கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யுமென்றால், ஹெட்போன் ஸ்பீக்கர் வழியாக குறைந்த அல்ட்ரா சவுண்ட் சிக்னலை அனுப்பி, எதிரொலிகளை மைக்ரோ போன் மூலமாக ரிசீவ் செய்து நமது இதயத்துடிப்பை கண்காணிக்க முடியுமாம். இந்த தொழில்நுட்பத்தை கூகுள் ஹெட்போன்களில் பயன்படுத்த உள்ளது. இதற்காக அல்ட்ரா சவுண்ட் சிக்னல் மூலம் கிடைக்கும் ஃபீட்பேக்குகளை உணரும்படியான கணினி மாதிரியையும் அவர்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர். குறிப்பாக இயர்பட்டில் நாம் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போதும் இது வேலை செய்யும் என்கின்றனர். எனினும் உடலில் ஏற்படும் அசைவுகளால் இதில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதை ஆய்வு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட மாதிரியை 153 நபர்களிடம் இரண்டு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களின் இதையத் துடிப்பு தொடர்ச்சியாக மிகத் துல்லியமான முறையில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், இதயத் துடிப்பின் மாறுபாடு பிழை சதவீதம் 3.21 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மருத்துவ துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் என கணித்துள்ள விஞ்ஞானிகள், கூகுள் நிறுவனம் இந்த மாடலை வெற்றிகரமாக செய்து முடித்தால் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படும் என கூறியுள்ளனர்.

