

மாற்றமே, மாற்றம் இல்லாதது என்பது உண்மையென்றாலும், அந்த மாற்றம் நல்லதற்கென்றால் நானிலம் போற்றும். அதுவே அல்லலுக்கும் அழிவுக்கும் வழி வகுக்கும் என்றால் உலகமே அதனை வெறுக்கும்.
விரும்பினாலும், வெறுத்தாலும் இயற்கை நிகழ்வுகள் நடந்தேறுவதை நிறுத்தும் சக்தி மனிதர்களாகிய நம்மிடம் இல்லை. ஆனால் அவற்றின் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள விஞ்ஞானம் பலவழிகளைக் கற்றுக்கொடுத்துள்ளது. அவற்றை முறையாக, தக்க தருணத்தில் மேற்கொண்டாலே பல இயற்கை அழிவுகளிலிருந்து மனித குலத்தைப் பெருமளவில் காப்பாற்றலாம். விதி விலக்காக நேபாள வெள்ளம் போன்றவை தங்கள் வேலையைக் காட்டிவிடுவதும் உண்டு!
எல்நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு வெப்பமடையும் பருவகால நிலை மாற்றமே ஆகும். ஸ்பானிஷ் மொழியில் எல்நினோ என்றால் ‘சிறுவன்’ அல்லது ‘கிறிஸ்து குழந்தை’ என்று பொருளாம். பெரு நாட்டு மீனவர்கள் முதன் முதலாகக் கிறிஸ்துமஸ் நேரத்தில் இதனைக் கண்டு பிடித்ததால் இந்தப் பெயரைச் சூட்டினார்களாம்.
இதன் மூலமாக, மேகவெடிப்பு பாதிப்பு, இயல்பான பருவநிலை மாற்றங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அது உண்மையே என்பதற்கு அடையாளமாக உலகப் பந்தை சூரியன் சுட்டெரித்து வருகிறான். நமது இந்திய நாட்டிலும், மேலை நாடுகளிலும் கோடையின் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக உயர்ந்துவிட்டது. உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் கோடை நீண்டு கொண்டும் போகிறது. மேலை நாடுகளில் இதனை நீட்டிக்கப்பட்ட கோடைகாலம் (Extended Summer) என்றழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
நமது தமிழகத்திலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே அதிக வெப்பத்தைக் கொடுத்த கதிரவன் இப்பொழுது ஓவர் டைம் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை அவருக்கும் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ இல் ஆர்வம் வந்துவிட்டது போலும். செப்டம்பர் மாதத்தில் கூட உஷ்ணம் குறைந்தபாடில்லை.
எவ்வளவு வெயில் அடித்தாலும் ஊசு கொட்டியபடி சமாளித்து விடும் நாம், மழை இரண்டொரு நாட்கள் தொடர்ந்தாலே சோர்ந்துபோய் விடுகிறோம். இவ்வளவுக்கும் நீரின் அருமையை நன்றாக உணர்ந்தவர்கள் நாம்! கோடையில் குடி நீருக்காய் ஆலாய்ப் பறக்கும் அவலத்தில்தானே நம்மில் பலர் காலந் தள்ளுகிறோம்! அப்படியிருந்தும் நீர் மேலாண்மை நம்மிடையே சிறப்புப் பெறாததால் பருவ மழையைக்கண்டு பயப்படுகிறோம்.
நமது தமிழ்நாட்டில் வருகின்ற பருவ மழைக்காலத்தை எப்படி நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுதலே கடைசி நேரக் கஷ்டங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வழி வகுக்கும். அதிக வெப்பத்தைப் போலவே அதிக மழையும் வெளுத்து வாங்கப் போவதாக வானிலை வல்லுனர்கள் இப்பொழுதே எச்சரிக்கைக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
அது உண்மைதான் என்பதுபோல் பாம்பே, டெல்லி போன்ற இடங்களில் மழை அதிகமாகப் பெய்துள்ளது. நமக்கு எது சவாலாக அமைந்து விடுகிறதென்றால், சில நாட்கள் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களிலேயே கொட்டித் தீர்த்து விடுவதுதான். ’மேக வெடிப்பு’ என்று அதற்குப்பெயர் சூட்டுகிறார்கள்.
அப்பொழுதெல்லாம் ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலங்களில் ஆதவனைக் காண்பதே அரிதாக இருக்கும். சீக்கிரம் சூரியன் தெரியவேண்டுமென்று வீட்டுக்குள் முடங்கியபடியே சாமியை வேண்டுவதுண்டு. இப்பொழுதெல்லாம் அந்த நிலையே மாறிவிட்டது. தொண தொணவென்ற மழைத்தூறலே நாட்டிற்கும் நல்லது என்பார்கள். அவ்வாறு பெய்கின்றபோது மழை நீரானது வழிந்தோடி விடாமல் பூமியில் இறங்கும். நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும்.
அடுத்த கோடையை அது இலகுவாக்கும். சில மணி நேரங்களில் பெய்கின்ற கனமழை வெள்ளமாகப் பெருக்கெடுத்து கடலைத்தேடி ஓடி, வீணாகிப்போகிறது. நம்மிடம் அதனைத் தடுத்து நிறுத்த போதுமான தடுப்பணைகளும் இல்லை. தூர் வாரி ஆழப்படுத்தப்பட்ட நீர் ஆதாரங்களும் இல்லை. அதிக வெள்ளமாகப் போகின்ற நீர் கார், வீடு என்று தன் பாதையில் உள்ள அனைத்தையும் இழுத்துச் சென்று, நம்மை ஆற்றொணா துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது.
எப்படித்தான் சமாளிப்பது? பள்ளப்பகுதியில் வீடு உள்ளவர்கள், வசதியிருப்பின் உயரமான இடங்களுக்கு மூவ் ஆகலாம்.
அப்படியில்லையா? மாடி வீட்டுக்காரர்களின் பர்மிஷனை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அவசரத்திற்குக் குடியேற.
கூரை வீட்டுக்காரர்கள் பிளாஸ்டிக் கவரை வீட்டின் மீது போட்டு நன்றாகக் கட்டி வைக்கவும்.
முக்கிய தஸ்தாவேஜூகள் வீட்டில் இருந்தால், நீர் புகாத பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி ப்ரீப் கேஸ்களில் வைத்துக் கொள்ளலாம். அவசரத்தில் எடுத்துச்செல்வது எளிதாகும்!
கையில் கேஷாகப் போதுமான பணம் வைத்துக் கொள்வது நல்லது. நெட் கனக்ஷன்கள் செயலற்றுப் போகலாம்.
பாட்டரி லைட்டுகள் அவசியம்.
குடைக்குப் பதிலாக ரைன் கோட்டுகள், காற்றடித்தாலும் பயன் தரும்.
டூ வீலர், கார் வைத்திருப்பவர்கள், ரெகுலர் சாலையில் மேடு, பள்ளங்கள் உள்ள இடங்களைக் கவனமாக நினைவில் வைக்கவும். சாலைகள் நீரால் சூழப்பட்டால் உதவும்.
அரசூழியர்கள் தற்காலத் தங்குமிடங்களுக்கு அழைத்தால், மேலே கீழே பார்க்காமல் சென்று தங்கிவிடுதல் நலம்.
பயந்து பானிக் ஆகாமல் நிதானமாகச் செயல்பட்டு, எதையும் நம்மால் கடந்து விடமுடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளல் அவசியம்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் திடீர் மேகவெடிப்பு மற்றும் கனமழையை அச்சமின்றி நிதானமாக எதிர்கொள்ளவும், கடைசி நேரப் பதற்றமின்றி அவசரக்கால உதவிகளையும் பொருட்களையும் கையாள்வதற்கான முழு தன்னம்பிக்கையையும் வழிகாட்டலையும் பெறுவீர்கள்.