பாரிஸ் நகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தடை!

Electric scooter
Electric scooter

தற்போது மாறிவரும் நவீன உலகில் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தற்போது உலகெங்கிலும் அதிகரித்துள்ளது. ஆனால் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே பாரிஸ் தெருக்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் பொதுமக்களுக்கு அதிக தொல்லை ஏற்பட்டு வந்தது. இதை முற்றிலும் தடை செய்வதற்காக அந்த நகத்தில் எடுத்த வாக்கெடுப்பில், அதில் பங்கேற்ற 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தடை செய்வதற்கு ஆதரவளித்து வாக்களித்தனர். இதன்படி அங்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இந்த வாக்கெடுப்பில் வெறும் ஏழு சதவீத மக்களே கலந்து கொண்டனர். இத்துடன் இந்தத் தடை, அங்கு கிடைக்கும் வாடகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். எலக்ட்ரிக் வாகனங்களை ஒருவர் சொந்தமாக வைத்திருந்தால் அவர்கள் எந்தவித தடையும் இன்றி அவற்றைப் பயன்படுத்தலாம். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பலர் பாரிஸ் நகரில் வாடகை மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையாக இருப்பதால், கடந்த சில மாதங்களாகவே இவை குறித்த புகார்கள் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த ஸ்கூட்டரை பயன்படுத்துபவர்கள் நடந்து செல்பவர்கள் செல்லும் வழியிலேயே ஓட்டி செல்கிறார்கள் என்றும், சிக்னலில் கூட ஏடாகூடமாக வாகனத்தை செலுத்துகிறார்கள் என்றும் பல புகார்கள் குவிந்தது. இந்த நகரத்தில் மட்டும் சுமார் 15,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை கடந்த 2022ல், 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் இந்த சேவை அங்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு மிகப்பெரிய தொல்லை தருவதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அரசின் இந்த நடவடிக்கையால் வாடகை ஸ்கூட்டரை அதிகம் பயன்படுத்தும் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பலர் தங்களுக்கு சொந்தமாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com