

"படித்து முடித்து, ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, கை நிறையச் சம்பாதித்து செட்டில் ஆகிடணும்" - இதுதான் நம்மில் 99 சதவீதம் பேரோட வாழ்க்கைக் கனவு. ஆனால், "வேலைக்கே போகாமல் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் காலம் வரப்போகிறது" என்று உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சொன்னால் எப்படி இருக்கும்? கேட்பதற்கு இனிப்பாக இருந்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளை நினைத்தால் கொஞ்சம் உதறல் எடுக்கத்தான் செய்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்று மஸ்க் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறார்.
வேலை என்பது ஒரு பொழுதுபோக்கு!
இன்னும் ஒரு 10 அல்லது 15 வருடங்களில், அதிகபட்சம் 20 வருடங்களில் உலகம் தலைகீழாக மாறப்போகிறதாம். இப்போது நாம் செய்வது போல, "வயிற்றுப் பிழைப்புக்காக வேலை" என்ற பேச்சுக்கே இடமிருக்காது. உங்களுக்குப் பிடித்தால் வேலை செய்யலாம், இல்லையென்றால் சும்மா இருக்கலாம். எப்படித் தோட்டத்துல செடி வளர்ப்பதை ஒரு பொழுதுபோக்கா செய்றோமோ, அதே மாதிரிதான் எதிர்காலத்துல வேலையும் மாறிடுமாம்.
ஏன் தெரியுமா? கார் ஓட்டுவது முதல், மூட்டை தூக்குவது வரை, ஏன்... கம்ப்யூட்டர் புரோகிராமிங் செய்வது வரை அத்தனை வேலைகளையும் ரோபோக்களே செய்துவிடும். கோடிக்கணக்கான ரோபோக்கள் மனிதர்களோடு கலந்து வாழப் போகின்றன. நமக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்த ரோபோக்களே உற்பத்தி செய்துவிடும் என்பதால், பொருட்களின் விலை அதலபாதாளத்துக்குச் சென்றுவிடும், அல்லது இலவசமாகக் கூட கிடைக்கலாம்.
பணம் மதிப்பிழக்கும்!
இங்கேதான் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய சிக்கல் வருகிறது. நாம் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேமித்து வைக்கும் பணத்திற்கு எதிர்காலத்தில் பெரிய மதிப்பு இருக்காது என்று மஸ்க் கணிக்கிறார். ஏனென்றால், மனித உழைப்பு தேவைப்படாதபோது, கூலி அல்லது சம்பளம் என்ற முறையே மாறிவிடும். இது பொருளாதாரத்தில் ஒரு பெரிய புரட்சியையே உண்டாக்கும். ஆரம்பத்தில் இந்த ரோபோக்களை உருவாக்குபவர்களுக்கு வேலை இருக்கலாம், ஆனால் போகப் போக அவர்களது வேலையையும் அந்த ரோபோக்களே கற்றுக்கொண்டு செய்யும் நிலை வரும்.
சுருக்கமாகச் சொன்னால், எதிர்காலத்தில் மனித இனம் 'ஜாலியாக' இருந்தால் மட்டும் போதும், மீதி எல்லாத்தையும் இயந்திரங்கள் பார்த்துக்கொள்ளும் என்கிறார் மஸ்க். இது ஒருவகையில் மகிழ்ச்சியான செய்தியாகத் தெரிந்தாலும், எந்த வேலையும் இல்லாமல், ரோபோக்களைச் சார்ந்து வாழும் வாழ்க்கை மனிதர்களுக்கு மனரீதியாக என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் என்பது பெரிய கேள்விக்குறி. தொழில்நுட்பம் வளரும் வேகத்தைப் பார்த்தால், மஸ்க் சொல்வது பலிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எதுக்கும் நாம கொஞ்சம் உஷாராவே இருப்போம்!