கடந்த சில ஆண்டுகளாகவே பூமி எப்போது அழியும் என்ற கணிப்பு பெரும் சர்ச்சைக்குரிய விவாதமாக பேசப்பட்டு வருகிறது. இதை கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளும் பல ஆண்டுகளாக பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் பூமியின் அழிவு குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அவர்களின் தேடுதலுக்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. அதாவது பூமியின் அழிவு எப்போது என்பதை துல்லியமாகக் கணித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். அவர்களின் கணிப்புப்படி இந்த பூமி இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் மட்டுமே மனிதன் வாழ்வதற்கு தகுதியானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் சூரியனுக்கு வயதாக வயதாக பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்றும், பூமி சூரியனுக்கு அருகே நெருங்கி செல்வதால் வெப்பம் அதிகரித்து பூமியின் வளிமண்டலம் சூடாகி கார்பன் டை ஆக்சைடு உருவாவதை அதிகரிக்கும். இந்த கார்பன் டை ஆக்சைடு ஒரு கிரீன் ஹவுஸ் வாயு என்பதால், பூமி மேலும் வெப்பமடைந்து, மனிதர்களின் வாழ்வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரியனுக்கு வயதாகும்போது அதன் காந்தப்புலம் பலவீனம் அடைவதால், பூமியின் வளிமண்டலத்தில் ஆற்றல்கள் குறைந்து, ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டு, உயிரினங்களும் தாவரங்களும் ஊட்டச்சத்து கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்.
இந்த இரண்டு காரணங்களாலும் பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, இறுதியில் வளிமண்டலம் முழுவதும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பி, ஒளிச்சேர்க்கையை நம்பி இருக்கும் தாவரங்களும் ஆக்சிஜனை நம்பி இருக்கும் உயிரினங்களும் அழிந்துவிடும். இத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ முடியாது.
குறிப்பாக இந்த நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது. இந்த அழிவு எப்போது தொடங்கும் என்பது பல காரணிகளைப் பொறுத்து அமையும். இவை அனைத்தையும் மதிப்பீடு செய்து காலவரிசையை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் வரை மட்டுமே நம்மால் பூமியில் உயிர் வாழ முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பிறகு பூமியின் மேற்பரப்பில் உள்ள உயிர்கள் அனைத்துமே அழிந்துவிடும்.
ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் நாம் வாழ்வதற்கு தகுந்த வேற்று கிரகத்தை கண்டுபிடித்து அங்கே மனிதர்கள் குடியேறினால் மட்டுமே மனித குலம் தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது நடக்கும் நிலையைப் பார்த்தால், ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதர்கள் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி பூமியை அழித்து விடுவார்கள்போல் தெரிகிறது.