
தற்போதுள்ள காலகட்டத்தில், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் வேலைபார்ப்பவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்றாகவே மாறிவிட்டது. கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்க திட்டமிடுபவர்கள், சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, உங்களுடைய பயன்பாட்டிற்கு தேவையான லேப்டாப், கம்ப்யூட்டர்களை தேர்வு செய்து வாங்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் எதிர்பார்க்கும் செயல்திறனுக்கு உங்களுடைய கம்ப்யூட்டரோ, லேப்டாப்போ ஒத்துழைக்காது. அதுபற்றி வழிகாட்டுதல்கள் இதோ...
* செயல்திறன் (Processor):
வீட்டு உபயோகம், அலுவலக தேவை, மல்டி மீடியா புராஜெக்ட்... என உங்கள் தேவைகளுக்கு ஏற்ப செயல்திறன் மிக்க செயலியைத் (Processor) தேர்வு செய்யவும். உதாரணமாக, வீடியோ எடிட்டிங் அல்லது கேமிங் போன்ற அதிக செயல்திறன் தேவைப்படும் பயன்பாடுகளுக்கு, இன்டல் கோர் ஐ-7 அல்லது அதற்கு மேற்பட்ட புராசசரை தேர்வு செய்யலாம்.
* நினைவகம் (RAM):
போதுமான நினைவகம் இருப்பது கணினியின் வேகத்திற்கு முக்கியம். குறிப்பாக, பல்பணி செய்யும் போது (multi-tasking) அல்லது நினைவகத்தை அதிகம் பயன்படுத்தும் பயன்பாடுகளை இயக்கும் போது இது முக்கியம். வீடியோ எடிட்டிங் போன்ற அதிக நினைவகம் தேவைப்படும் செயல்களுக்கு, 16 ஜி.பி. ரேம் அல்லது அதற்கு மேற்பட்ட நினைவகத்தைத் தேர்வு செய்யலாம்.
* சேமிப்பகம் (Storage)
இப்போது நினைவகம், எஸ்.எஸ்.டி. மற்றும் எச்.டி.டி. என இருவேறு வகைகளில் கிடைக்கிறது. இதில் சாலிட் ஸ்டேட் டிரைவ் (Solid State Drive) எனப்படும் சேமிப்பகத்தைப் பயன்படுத்தினால், கணினியின் வேகம் அதிகரிக்கும். மேலும், ஹார்ட் டிஸ்க் டிரைவ் (Hard Disk Drive) எனப்படும் எச்.டி.டி. நினைவகத்தை விட எஸ்.எஸ்.டி. நினைவகமானது வேகமானது மற்றும் நம்பகமானது. விபத்து மற்றும் வைரஸ் தாக்குதல்களை எதிர்கொண்டாலும், அதிலிருக்கும் தரவுகளை திரும்ப பெற அதிக அளவிலான சாத்தியக்கூறுகளை பெற்றது.
* கிராபிக்ஸ் கார்டு (Graphics Card)
வீடியோ எடிட்டிங், கேமிங் போன்ற செயல்களுக்கு, பிரத்யேக கிராபிக்ஸ் கார்டு இருப்பது அவசியம்.
என்வீடியா ஜீ போர்ஸ் அல்லது ஏ.எம்.டி.ராடியான் போன்ற கிராபிக்ஸ் கார்டுகளைப் பயன்படுத்தலாம். இவை, உங்களுக்கு தேவையான கிராபிக் சப்போர்ட்டை வழங்கும். ஆன்லைன், ஆப்லைன் விளையாட்டுகளை அழகாக காட்டும்.
* திரை அளவு மற்றும் தரம்
உங்கள் பார்வைத் தேவைகளுக்கு ஏற்ப திரை அளவு மற்றும் திரை தெளிவுத்திறனைத் தேர்வு செய்யவும். 18 அங்குலத்தில் தொடங்கி, பிரமாண்டமாக 52 அங்குலம் அதற்கும் மேலான ராட்சத திரைகள் வரை சந்தையில் நிறைய மானிட்டர்கள் கிடைக்கின்றன. சிலர் ஸ்மார்ட் டி.வி.க்களை கூட கம்ப்யூட்டர் மானிட் டராக மாற்றி பயன்படுத்துகிறார்கள். அதனால் உங்களின் தேவைக்கு ஏற்ற கம்ப்யூட்டர் திரை அளவுகளை முடிவு செய்யுங்கள்.
* இயங்குதளம்
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை இயக்கக்கூடிய ஓ.எஸ். தேர்வும் மிக முக்கியம். இப்போது மைக்ரோசாப்டின் விண்டோஸ் 11 பிரபலமான மற்றும் எளிமையான இயங்குதளமாக திகழ்கிறது. அத்துடன், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களும் சிறப்பானவைதான்.
* மற்ற அம்சங்கள்
இவைதவிர, வை-பை, புளூடூத், யூ.எஸ்.பி. போர்ட்டுகள்... இவை அனைத்தும் நவீன அப்டேட்டுகளுடன் இருக்கிறதா..? என்பதை சோதித்து பார்ப்பதும் அவசியம்.