மருத்துவமனைகளில் புதிய Ai தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வரும் Google.

மருத்துவமனைகளில் புதிய Ai தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வரும் Google.

லகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் எப்படியாவது செயற்கை நுண்ணறிவுத் துறையில், OpenAi நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னேர வேண்டும் என்ற முனைப்பில், பல இலக்குகளுடன் செயல்பட்டு வருகிறது. 

என்னதான் ChatGPT தொழில்நுட்பத்திற்கு போட்டியாக கூகுள் Bard-ஐ அறிமுகம் செய்தாலும், OpenAi நிறுவனத்தின் ஆதிக்கத்தை குறைக்க முடியவில்லை. இந்நிலையில் கூகுள் தற்போது மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்து வருகிறது. இதற்காக Med-PaLM 2 என்ற ஏஐ சேட் பாட்டை மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் கூகுள் பலகாலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தாலும் ஏஐ சேட் பாட் துறையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தான் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாகத்தான் மருத்துவத்துறைக்காக Med-PaLM 2 என்ற மெடிக்கல் ஏஐ சேட் பாட்டை உருவாக்கி சோதித்து வருகின்றனர். இந்த சாதனம் மருத்துவத்துறை சார்ந்த கேள்விகளுக்கு துல்லியமாக பதில் அளிக்கும். மேலும் மருத்துவத்துறை சார்ந்த எல்லா செயல்முறைகள் குறித்த ஆழ்ந்த புரிதலையும், கற்றலையும் இது தன்னுள் கொண்டிருக்கும். 

மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைக்க முடியாத மக்களுக்கும், அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பணம் செலவிடும் நிதி நிலையில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கும் பெரிய அளவில் பயன்படும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்ட அறிக்கையில், இந்த சேட் பாட்டில் துல்லியமான பதில் கிடைப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. மேலும் பல மருத்துவர்கள் இதில் சேவை சார்ந்த பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அறிவித்தனர். 

இதைத் தொடர்ந்து சில முக்கிய மருத்துவமனைகளில் கூகுள் இதை நேரடியாக சோதனை செய்து வருகிறது. தற்போது இருக்கும் மருத்துவ முறையில் அதிக நேரம் எடுத்துக்கொள்வது ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரும் ஆரம்பக்கட்டம்தான். ஏனென்றால் புதிதாக வரும் நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதை, எல்லா பரிசோதனைகளும் மேற்கொண்ட பிறகு தான் கண்டுபிடிக்க முடியும். எனவே இதற்காக அதிகப்படியான நேரம் மருத்துவர்களும், ஊழியர்களும், பணியாற்றுகின்றனர். 

ஆனால் மெடிக்கல் ஏஐ சேட் பாட் மூலம், ஆரம்பக் கட்டத்தில் அனைத்துமே தானாக சோதனை செய்யப்பட்டு துல்லியமான முடிவுகளை இந்தத் தொழில்நுட்பமே கொடுத்துவிடும். இதை ஒரு மருத்துவர் கண்காணித்து உறுதி செய்தால் போதும். இதனால் மருத்துவ சேவை வெகுவாக மேம்படுத்தப்படும் என பல நிபுணர்கள் நம்புகின்றனர். அதிகரித்து வரும் மக்கள் தொகையால் போதுமான மருத்துவர்கள் இல்லாத நாடுகளில் இந்த சேவை பெரிய பலன் தரும். 

இதில் பல பிரச்சினைகள் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், கூகுள் அவற்றை நிவர்த்தி செய்து பல மேம்படுத்தல்களுடன் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது சவால் நிறைந்ததுதான். ஆனால் இது வெற்றியடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால் நோயாளிகளின் ஆரம்ப நிலையில் இருக்கும் மருத்துவர்களின் தேவை வெகுவாகக் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com