கார் விபத்துக்களை கண்டறியும் Car Crash Detection அம்சத்தை இந்தியாவில் முதன்முறையாக கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே இந்த புதிய அம்சம் அமெரிக்கா உள்ளிட்ட பல குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்தியா உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் கூகுள் பிக்சல் போன்களில் இந்த சேவை கிடைக்கிறது. இதன் பெயரை வைத்து முன்கூட்டியே விபத்து நடப்பதை இது கண்டுபிடித்துவிடும் என நினைக்க வேண்டாம். இந்த அம்சம் கார் விபத்திலிருந்து யாரையும் காப்பாற்றாது. ஆனால் கார் விபத்து நடந்ததும் அவசர உதவிக்கு மக்கள் பயன்படுத்தும் புதிய அம்சம்தான் இது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக கூடிக்கொண்டே வருகிறது. இதுபோன்ற சாலை விபத்துகளில் ஒருவர் உயிரிழப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காதுதான். எனவே இத்தகைய பிரச்சினையை சரி செய்யத்தான் கார் விபத்து சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் ஃபோன்களில் மட்டுமே கிடைக்கும் இந்த பிரத்யேக அம்சம், விபத்து ஏற்பட்டவுடன் தானாக செயல்பட்டு, எமர்ஜென்சி காண்டாக்ட் எண்ணை தானாகவே அழைத்து உடனடியாக உதவி கிடைக்கும்படி செய்யும். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், இந்த அம்சத்தை கூகுள் பிக்சல் போன்களில் மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். கூகுள் பிக்சல் 4a மற்றும் அதற்குப் பிறகு வெளிவந்த எல்லா பிக்சல் போன்களிலும் இந்த அம்சம் கிடைக்கும்.
ஆங்கிலம், பிரென்ச், ஸ்பேனிஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளை சப்போர்ட் செய்யும் இந்த கூகுள் எமர்ஜென்சி அலர்ட் அம்சம், ஏற்கனவே ஐபோன்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அம்சத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என நம்பப்படுகிறது.