உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் ஏஐ நிறுவனமான DeepMind மூலமாக Gemini 1.0 என்ற ஏஐ கருவியை அறிமுகம் செய்துள்ளது. இது மனிதர்களை விட சிறப்பாக சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டதாக கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் என பல விஷயங்களை நம்முடைய கற்பனைக்கு ஏற்ப உருவாக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தால் நாம் என்ன சொல்கிறோம் என்பதை கணப்பொழுதில் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறான புதிய விஷயங்களை உருவாக்கித் தர முடியும். எவ்விதமான சிக்கலான கேள்வியாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறான பதிலை அளிக்க முடியும். இது இயற்பியல், கணிதம் போன்ற சிக்கலான விஷயங்களுக்கும் சிறப்பான பதிலை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
Gemini 1.0 ஆல் உலகின் சிக்கலான மொழிகளான ஜாவா, பைத்தான், சி++ போன்றவற்றை புரிந்து கொண்டு, விளக்கி, புதிதான புரோகிராமிங் லாங்குவேஜ் கூட உருவாக்க முடியும். மொத்தம் மூன்று அளவுகளில் வெளிவந்துள்ள இந்த கருவி ஒவ்வொன்றும் தனித்துவமான வேலைகளுக்காக பயன்படும். இது கூகுளின் ஜெனரேட்டிவ் கருவியான பார்டில் இயங்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் பார்ட் ஜெனரேட்டிவ் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டதிலிருந்து வெளிவந்திருக்கும் மிகப்பெரிய அப்டேட் ஆகும். இது உலக அளவில் சுமார் 170-ற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்கில மொழியில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் உலகின் பல புதிய மொழிகள் மற்றும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த அம்சம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கூகுள் பார்ட் வழியாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதனால் AI தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.