
இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா உங்களுக்கு? அது வேறு யாரும் இல்லை நம் காலம் சென்ற திரு ஜி டி நாயுடு அவர்கள் தான். இவரது முழு பெயர் கோபாலசாமி துரைசாமி நாயுடு. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் என்ற ஊரில் 1893 இல் பிறந்தார்.
குழந்தையாக இருந்தபோது பள்ளிக்கு செல்ல அவருக்கு துளியும் விருப்பமில்லை. ஆகவே ஆரம்ப பள்ளியோடு இவரது படிப்பு நின்று போனது. ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்று கோவையில் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி அதை தனித்தனியாக பிரித்து மீண்டும் ஒன்று சேர்த்து ஒரு மெக்கானிக்காக உருவெடுத்தார்.
1920 இல் ஒரு பேருந்தை வாங்கி பொள்ளாச்சி பழனிக்கு இடையே ஓடவிட்டார். இவருடைய யூனிவேர்சல் மோட்டார் சர்வீஸ் இந்தியாவிலேயே வெகு சிறப்பாக நடத்தப்பட்ட வாகன கம்பெனியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ் என்ற இவரது தொழிற்சாலையிலிருந்து தான் இந்தியாவின் முதல் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. மிகவும் மெல்லியதாக முகக்ஷவர பிளேடு, பழரசம் எடுக்கும் மிக்சி, சில்மிஷம் செய்ய முடியாத ஓட்டு போடும் எந்திரம், கேரோசனில் ஓடும் விசிறி போன்றவை ஜீ டி நாய்டு கண்டுப்பிடித்தவைகளுள் சில. 1952 இல் 2000 ரூபாய் செலவில் இருவர் பயணம் செய்யும் அளவுக்கு ஒரு காரை அவர் தயாரித்தார். ஆனால் அதற்கு அரசாங்கம் லைசென்ஸ் தர மறுத்து விட்டது.
விவசாயத்திலும் தன் அறிவை பயன்படுத்தி புது வகை பருத்தி மற்றும் பப்பாளி வகைகளை அறிமுகப்படுத்தினார்.
இவரை மிகவும் பாராட்டியவர்களுள் நோபல் பரிசு பெற்ற சி வி ராமன் அவர்களும் ஒருவர். இவரது சாதனைகளில் இன்னொன்று இவர் 11 மணிகளில் கட்டிமுடித்த ஒரு வீடாகும். கோவைக்கு சிறுவாணி நீரை கொண்டு வந்தவரும் இவரே.
கோவையில் இவரை பற்றிய ஒரு கண்காட்சி இயங்கி வருகிறது. இக்கண்காட்சியில் இவரது படைப்புகளும் சாதனைகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நம்மை மிகவும் கவர்வது இவர் அன்று பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையே தானே ஓட்டிய பேருந்தாகும். இவர் மட்டும் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஊக்குவிக்கப்பட்டு இன்னும் பல சாதனைகளை புரிந்திருப்பார்!??