ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களுக்கு அரசு வைத்த செக்.

ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களுக்கு அரசு வைத்த செக்.
Published on

புதிய ஸ்மார்ட் ஃபோன்களில் முன் கூட்டியே நிறுவப்பட்ட ஆப்களை பயனர்கள் நீக்கும் அம்சம் கட்டாயம் இருக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. உளவு பார்த்தல் மற்றும் பயனர்களின் தரவுகளை தவறாகப் பயன் படுத்தப்படுதல் இதனால் தடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

2020 சீன எல்லை மோதலுக்கு பிறகு டிக் டாக் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. அதிலிருந்தே சீன வணிகங்களையும், சீன நிறுவனங்களின் மீதான முதலீடுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. 

புதிய பாதுகாப்பு விதிகளின்படி, முன்கூட்டியே நிறுவப்பட்ட செயலிகளை நீக்கும்படியான ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் கொண்டு வர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, முன்கூட்டியே நிறுவப்பட்ட செயலிகளால் பயனர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அவை நீக்க முடியாத ஒன்றாக இருப்பதால் பயனர்களுடைய தரவுகள் தனியுரிமைகள் பிறரால் உளவு பார்க்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

சீனா உள்பட எந்த நாட்டு உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும், எங்கள் நாட்டின் பாதுகாப்பு முறையை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்யும் படியும். ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட் மூலமாக கட்டுப்பாடுகளை நீக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த புதிய விதிமுறைகளால், உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் சந்தையாக விளங்கும் இந்தியாவில், தொழில் நஷ்டமடைய வாய்ப்பு உள்ளது என கூறப் படுகிறது. ஏனென்றால் சாம்சங், ஆப்பிள், விவோ போன்ற நிறுவனங்களுக்கு முன்கூட்டியே நிறுவப்பட்ட செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. 

டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை நாட்டு மக்களுக்கு வழங்கும் வகையில் இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முன்னதாக ஒரு அறிவிப்பில், ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் ஒவ்வொரு முறை வழங்கும் அப்டேட்டுகள் குறித்து சோதனை செய்ய ஆய்வகங்கள் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தது. இதை பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் கவனித்துக் கொள்ளும். 

மேலும் ஸ்மார்ட் போன்களில் நிறுவப்படும் செயலிகளை முன்கூட்டியே இந்தியா தரப்பில் ஆய்வுகள் செய்வதற்கான அனுமதியும் கேட்டிருந்தது. இதைப் பற்றி உற்பத்தியாளர்களுடன் சந்திப்புகள் நடத்திய பின் புதிய விதிகள் சார்ந்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும், அந்த விதிகளை ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 

பயனர் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com