மரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பசுமை பேட்டரி.

மரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பசுமை பேட்டரி.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மரங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை பேட்டரிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மரங்கள் பல வகையில் மனிதர்களுக்கு உதவியாய் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நமக்காக ஏராளமான நன்மைகளை பெரும்பாலான மரங்கள் செய்து வருகிறது. குறிப்பாக மனிதன் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனையும் வழங்குகிறது. இருப்பினும், காலநிலை மாற்றத்தாலும், மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது போன்ற பிரச்சனையாலும் உலகிற்கு பெரும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விஷயங்களைப் பயன்படுத்த வேண்டும் என சமீப காலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருட்கள்தான். உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கான வாகனங்கள் இயங்குவதால் அதிலிருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியேறுகிறது. இதைத் தடுப்பதற்காகவே மின்சார வாகனத்தின் பயன்பாட்டை அதிகரிக்க எல்லா நாடுகளும் தீவிரம் காட்டி வருகிறது. 

இதில் ஒரு பகுதியாக, அந்த மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்குப் பதிலாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பசுமை பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 'சோரா அயன் சோ' என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

மரங்களிலிருந்து பேட்டரி தயாரிப்பது சாத்தியமா? 

ரங்களிலிருந்து கிடைக்கும் லிக்னின் என்ற பொருளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பசுமை பேட்டரிகளை தயாரிக்கலாம் என 'சோரா அயன் சோ' நிறுவனம் கூறியுள்ளது. 

தற்போது உருவாக்கப்படும் பேட்டரிகளில், ஆனோடு எனப்படும் நேர்மின்வாய்ப் பகுதியை உருவாக்க, புதைப்படிம எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, மரங்களில் இருந்து கிடைக்கும் 'லிக்னின்' என்ற பாலிமரைப் பயன் படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மேலும் இது குறித்து பல நிறுவனங்களும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதில் ஒரு நிறுவனம்தான், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 'சோரா அயன் சோ' நிறுவனமாகும். 

உலகில் காகிதப் பயன்பாடு கணிசமாகக் குறைந்து, காகிதமில்லா அலுவலகங்கள் பிரபலமாகி வரும் நிலையில், மரத்தைப் பயன்படுத்தி வேறு வழியில் எப்படி வருவாய் ஈட்டலாம் என இந்நிறுவனம் ஆராய்ந்து வந்தது. அப்போது அந்நிறுவனப் பொறியாளர்கள் கொடுத்த யோசனை தான் பசுமை பேட்டரி. காகிதக் கூழிலிருந்து லிக்னினைப் பிரித்தெடுத்து பேட்டரியின் முக்கிய மூலப்பொருளான கார்பனைத் தயாரிக்கலாம். 

இந்த லிக்னினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பேட்டரியை மின்சார வாகனங்களில் பயன்படுத்தும்போது, வெறும் 8 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம் என இந்நிறுவனம் கூறுகிறது. எனவே இந்த பசுமை பேட்டரியின் தயாரிப்பை 2022ல் தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டும் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால், மின்சார வாகனத் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com