HAARP தொழில்நுட்பம்: துருக்கி-சிரியா பூகம்பத்திற்கு இதுதான் காரணமா?

HAARP தொழில்நுட்பம்: துருக்கி-சிரியா பூகம்பத்திற்கு இதுதான் காரணமா?
Published on

துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு, அமெரிக்க ராணுவத்தின் தொழில் நுட்பமான HAARP தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. பூகம்பம் ஏற்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக வானத்திலிருந்து மின்னல் உண்டானதாகவும் அதனால்தான் பூகம்பம் ஏற்பட்டதாகவும் சில ஊடகங்கள் வெளியிட்ட நிலையில், இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என HAARP மறுத்துள்ளது. 

சமீப காலமாகவே பூகம்பம் பற்றிய முன்னறிவிப்பு எச்சரிக்கை அமைப்புகள், பூகம்பத்தின் தாக்கத்தை குறைக்கும் படியான மேம்படுத்தப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அவசர கால திட்டங்களில் அரசாங்கங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இவை அனைத்தும் செய்யப் பட்டாலும் இயற்கை பேரழிவு, குறிப்பாக நிலநடுக்கம் என்பது பெரும்பாலும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. 

பூகம்பம் என்பது டெக்டானிக் தகடுகளின் இயக்கத்தால் ஏற்படுவதாகும். பூமியின் மேற்பரப்பில் பல டெக்டானிக் தகடுகள் உள்ளன. இவை ஓர் அரை திரவப் பகுதியில் மிதக்கிறது. இவ்வாறு மிதந்து கொண்டிருக்கும் இரண்டு தகடுகள் எதிரெதிர் திசையில் நகர்ந்தால், அப்போது ஏற்படும் உராய்வின் காரணமாக ஆற்றல் வெளிப் படுகிறது. இந்த ஆற்றல் தான் இறுதியில் நிலநடுக்க வடிவில் பூமியின் மேற்பரப்பில் நம்மால் உணரப்படுகிறது. இந்த டெக்டானிக் தகடுகளின் இயக்கம் நிலத்தடி சுரங்கங்கள் இடிந்து விழுதல், எரிமலை வெடித்தல், விண்கல் தாக்குதல் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். 

HAARP என்றால் என்ன?

HAARP (High-frequency Active Auroral Research Programme) என்பது பூமியின் வெளிமண்டலத்தில் அடுக்காக அமைந்திருக்கும் அயனோஸ்பியரைப் பற்றிய ஆராய்ச்சித் திட்டமாகும். இதில், அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளை உருவாக்கி அவற்றை அயனோஸ்பியருக்குள் செலுத்துவதற்கு பெரிய அளவிலான ஆன்டனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பூமியில் காலநிலை மாற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.

HAARP திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இதைப் பற்றி HAARP தரப்பில் கூறப்பட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் எங்கள் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்திற்கு வானிலையைப் பயன்படுத்தி நிலநடுக்கங்களை கொண்டுவரும் எந்தத் திறனும் இல்லை. இதில் உள்ள அறிவியல் உபகரணங்களால் எவ்விதமான இயற்கை பேரழிவுகளையும், செயற்கையாக உருவாக்கவோ பெரிதாக்கவோ முடியாது.  சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு முழுக்க முழுக்க இயற்கையானது" என்று, HAARP திட்டத்தின் மேற்பார்வையாளர் ஜெசிக்கா மேத்யூஸ் கூறியுள்ளார். 

மேலும் HAARP தொழில்நுட்பத்தால் ஏற்படும் ரேடியோ அலைகள் உள்நாட்டில் உள்ள வளிமண்டலத்தை சீர்குலைக்குமே தவிர, அவற்றால் மின்னல்களை ஏற்படுத்த முடியாது என்று பாஸ்டன் பல்கலைக் கழகத்தின் மின் பொறியியல் ஆராய்ச்சி பேராசிரியர் தோஷி நிஷிமுரா கூறியுள்ளார். அவருடைய கூற்றுப்படி பூகம்பத்தில் ஏற்பட்ட மின்னல்கள், மின் இணைப்புகள் அல்லது கட்டடங்கள் பூகம்பத்தால் சேதமடையும் போது ஏற்படும் தீப்பொறிகளால் தோன்றியவையாக இருக்கலாம் எனப்படுகிறது. 

வதந்தி பரப்புபவர்கள் கூறுவது போல், HAARP தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கையாக இயற்கை பேரழிவுகள் ஏற்படுத்த முடியும் என்றால், அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. வதந்தியைப் பரப்புகிறேன் என்கிற பெயரில், நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாக உணர முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com