
அறிவியல் தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சியின் காரணமாக பலதுறைகளும் நவீனமயமாகிவிட்டன. அதில் ஒரு துறைதான் புக் பப்ளிஷிங் (Book Publishing) எனப்படும் புத்தகம் வெளியிடும் துறை. புத்தக உருவாக்கம் அன்று எப்படி இருந்தது இன்று எப்படி முன்னேறி இருக்கிறது என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
எழுபது மற்றும் எண்பதுகளில் ஒரு புத்தகமானது அச்சுக்கோர்ப்பு முறையிலேயே (Letter Press Composing) உருவாக்கப்பட்டது. எழுத்தாளர் கையால் எழுதிய கையெழுத்துப் பிரதியை, அச்சுக்கோர்ப்பவர் தனக்கு முன்னால் வைத்துக் கொண்டு அதில் உள்ள வார்த்தைகளை ஈயத்தால் ஆன ஒவ்வொரு எழுத்தாக எடுத்துக் கோர்ப்பார். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு அச்சு இருக்கும். அதில் ஒவ்வொரு எழுத்தாக பொருத்தி ஒரு பக்கத்தை உருவாக்குவார். அதன் மேல் இங்க்கைத் தடவி அதை ஒரு வெள்ளைப் பேப்பரில் ஒத்தி எடுப்பார். அந்த பிரதி எழுத்தாளர் அல்லது பிழைதிருத்துனரிடம் கொடுக்கப்படும். அவர் அதைப் படித்து அதில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொடுப்பார். பின்பு மீண்டும் அச்சுக் கோர்ப்பவர் அதிலுள்ள பிழைகளை சரிசெய்வார்.
அட்டைக்கான ஓவியத்தை ஓவியர் வரைந்து கொடுக்க அதை பிளாக் எடுத்து இருவண்ணம் அல்லது மூன்று வண்ணங்களில் தனியாக அட்டைகளை அச்சடிப்பார்கள்.
பதினாறு பக்கங்கள் கொண்டது ஒரு பாரம் என்று அழைக்கப்படும். இப்படியாக பத்து அல்லது பதினைந்து பாரங்கள் கொண்ட புத்தகங்களை அச்சடித்து பைண்டு செய்து பின்னர் அட்டையை லேமினேட் செய்து இணைப்பார்கள்.
அச்சுக்கோர்த்து அச்சடிப்பதன் காரணமாக அக்காலத்தில் ஒரு புத்தகத்தை குறைந்தபட்சம் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட வேண்டிய சூழ்நிலை நிலவியது. ஆயிரம் பிரதிகள் எப்போது விற்பனையாகும் என்பது தெரியாது. விற்பனை ஆகாமலும் போகலாம். அவற்றை அடுக்கி வைக்க பதிப்பகங்கள் அதற்கென ஒரு குடோனை வாடகைக்கு எடுப்பர். மழைக்காலங்களில் புத்தகங்கள் வீணாகி பதிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இப்படியாக அக்காலத்தில் ஒரு புத்தகத்தைத் தயாரித்து பாதுகாத்து விற்பனை செய்வதில் பதிப்பாளர் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.
அச்சுக் கோர்ப்பு முறைக்குப் பின்னர் ஆஃப்செட் (Offset Printing Press) முறை நடைமுறைக்கு வந்தது. இதில் அச்சுக் கோர்ப்பிற்கு பதிலாக புத்தகங்களின் பக்கங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதிலிருந்து மாஸ்டர் தயாரிக்கப்பட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த மாஸ்டர்களை பத்திரப்படுத்தி வைத்து எப்போது வேண்டுமானாலும் புத்தகங்களை அச்சடித்துக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் பெரும் சிரமம் சற்று குறைந்தது என்றே சொல்லலாம். அச்சுக்கோர்ப்பின் மூலம் உருவாக்கப்ப்படும் புத்தகங்களைக் காட்டிலும் ஆஃப்செட் முறையில் அச்சடிக்கப்படும் புத்தகத்தின் தரம் சிறப்பாக இருந்தது. ஆஃப்செட் இயந்திரத்தின் மூலம் பலவண்ண புத்தகங்களை அச்சடிக்க முடிந்தது. ஆனால் தயாரிப்பு செலவு கூடுதலாக ஆயிற்று.
சரி. தற்காலத்திற்கு வருவோம். தற்காலத்தில் கணினிகளில் வருகைக்குப் பின்னர் எழுத்தாளர்கள் வேர்ட் டாக்குமெண்ட்டில் யுனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தி புத்தகங்களை எழுதத் தொடங்கி விட்டனர். இந்த கோப்பினை இன்டிசைன் (Indesign Publishing Software) என்ற சாஃப்ட்வேரில் காப்பி செய்து புத்தகப் பக்கங்களை எளிதில் வடிவமைத்து விடுகிறார்கள். எல்லா பக்கங்களையும் வடிவமைத்து அதை பிடிஎஃப் கோப்பாக உருவாக்குகிறார்கள். பின்பு அட்டையினை உருவாக்கி முடிக்கிறார்கள்.
ஏஐ தொழில்நுட்பத்தின் வருகைக்கு பின்னர் புத்தகத்திற்கான ஓவியங்கள் ஏஐ மூலம் சுலபமாக வரைய முடிகிறது. இதனால் செலவும் கணிசமாகக் குறைகிறது. தற்காலத்தில் Print On Demand என்ற முறையில் குறைந்த செலவில் குறைந்தபட்சம் பனிரெண்டு புத்தகங்களைக் கூட அச்சடிக்க முடிகிறது. புத்தகங்கள் தேவைப்படும் போது அவ்வப்போது அச்சடித்துக் கொள்ளும் முறையே POD என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் உள்ள ஒரு வசதி என்னவென்றால் புத்தகங்களை மொத்தமாக அச்சடித்து அவற்றைப் பாதுகாக்கத் தேவையில்லை. தேவையான புத்தகங்களை பனிரெண்டு பிரதிகள் கூட தினம் தினம் கூட அச்சடித்துக் கொள்ளலாம்.
நவீன தொழில்நுட்பம் பதிப்புத் துறையில் பெரும் புரட்சியினை ஏற்படுத்தி எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பெரும் துணையாக நிற்கிறது. தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை குறைந்த செலவில் தாங்களே பதிப்பித்துக் கொள்ள முடிகிறது. ஐயாயிரம் ரூபாய் செலவில் நூற்றி இருபது பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை நூறு பிரதிகள் அச்சடித்து விடலாம் என்பது ஒரு வரப்பிரசாதம்தானே!